சாங்கி சவுத் சாலை மேம்பாட்டுப் பணிகள் 2024ல் தொடங்கும்

2 mins read
4f9850c2-4385-421a-a205-c460e7beb7b0
Terminal 1 and 2 and the future Jewel in the background. Foreground is the construction site of Terminal 5 on November 22, 2017.  - The Straits Times

சாங்கி சவுத்தில் சாலை மேம்பாட்டுப் பணிகள், நான்கு ஆண்டு தாமதத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாங்கி விமான நிலையம் முனையம் 5 போன்ற எதிர்கால மேம்பாடுகளின் மூலம் பயணத் துறையில் தேவைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதைச் சமாளிக்க ஏதுவாக சாங்கி சவுத்தில் சாலை மேம்பாட்டுப் பணிகள் இடம்பெற விருக்கின்றன.

இது பற்றி கேட்டபோது விளக்கம் அளித்த நிலப் போக்குவரத்து ஆணையம், அந்த 9 கி.மீ. சாலை உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்கான திட்டங்களை கொவிட்-19 காரணமாக ஒத்திவைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்தது.

கட்டுமானப் பணிகள் 2030ஆம் ஆண்டில் இருந்து கட்டம் கட்டமாகப் பூர்த்தி செய்யப்படும். இந்தப் பணிகள் 2026 முடிவில் பூர்த்தி செய்யப்பட விருந்தன.

சாங்கி சவுத் சாலை மேம்பாட்டுப் பணிகள் பற்றி 2019ல் அறிவிக்கப்பட்டது. அந்தப் பணிகள் 2020 முடிவு வாக்கில் தொடங்கவிருந்தன.

அதன்படி முனையம் 5ஐயும் தானா மேரா கோஸ்ட் ரோடு மற்றும் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே யையும் இணைக்கும் புதிய சாலைகள் அந்தத் திட்டத்தின்படி கட்டப்படும்.

தானா மேரா கோஸ்ட் ரோடு அகலப்படுத்தப்படும். தீவு விரைவுச் சாலையும் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயும் ஸிலின் அவென்யூவும் அகலப்படுத்தப்படும்.

சாங்கி மேம்பாலச் சாலையும் தானா மேரா மேம்பாலச் சாலையும் திருத்தி அமைக்கப்படும்.

ஸிலின் அவென்யூவில் 3.5கி.மீ. நீளத்திற்கு புதிய சைக்கிளோட்டப் பாதைகள் அமைக்கப்படும்.

தானா மேரா கோஸ்ட் ரோடு தெம்பனிசை இணைக்கும். ஈஸ்ட் கோஸ்ட் பகுதி முனையம் 5 உடன் இணைக்கப்படும்.

அதிகாரிகள், சாங்கி சவுத் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளைத் தாக்கல் செய்யும்படி 2023 மே 31ஆம் தேதி கோரிக்கை விடுத்தனர்.

பணிகள் நடக்கும்போது ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வேயில் தற்காலிகமாகப் போக்குவரத்து திருப்பிவிடப்படும் என்று ஆணையம் தெரிவித்தது.

சாங்கி சவுத்தில் இடம்பெறவிருக்கக்கூடிய சாலை மேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு பகுதியாக இப்போதைய சாலைகள் அகலப்படுத்தப்படும். புதிய சாலைகள் கட்டப்படும். புதிய ஒரு மேம்பாலச் சாலை அமையும்.

சாங்கி விமான நிலையத்திற்கு வடக்கேயும் தெற்கேயும் சைக்கிளோட்ட வழிகள் உருவாகும்.

சாங்கி வடக்கு வழித்தடம், சாங்கி தெற்கு வழித்தடம் என்று குறிப்பிடப்படும் இந்தப் போக்குவரத்து திட்டங்கள், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த தொழில்துறைகளுக்கும் நிறுவனங்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு மட்டுமன்றி, முக்கியமான சாலைகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்து தேக்கத்தைத் தவிர்க்கவும் அவை உதவும்.

குறிப்புச் சொற்கள்