மோசடிக்காரர்கள் தன் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி $85,220 பணத்தைப் பெறுவதற்கு அனுமதித்த 17 வயது பையன் அதேபோன்ற தவறைச் செய்ய தன் நண்பர்களையும் ஆள் சேர்த்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பணம், ஓசிபிசி வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து திருடப்பட்டது. இதர மோசடிக்காரர்கள் வலையில் சிக்கிய இதர அப்பாவிகளின் $186,693 மொத்த தொகை இரண்டு நண்பர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
மூன்றாவது வங்கிக் கணக்கு வேலை தொடர்பான மோசடிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.
குற்றவாளிக்கு வயது இப்போது 19. அவர் 21 மாத நன்னடத்தைக் கண்காணிப்பின்கீழ் வைக்கப்பட்டார். அந்த இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அவருக்கு விதிக்கப்பட்டு இருக்கும் தண்டனையின் பகுதியாக அந்த இளைஞர், அன்றாடம் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை வீட்டிலேயே இருக்க வேண்டும். 100 மணி நேரம் சமூக சேவையாற்ற வேண்டும்.
அந்த இளைஞரின் நல்ல நடத்தையை உறுதிப்படுத்த அவரின் பெற்றோர் முயல வேண்டும். இதில் தவறினால் அந்தப் பெற்றோருக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கும் $5,000 பிணைத்தொகை பறிபோய்விடும்.
குற்றவாளியான இளைஞர் குற்றச்செயல்களில் ஈடுபட்டபோது அவருக்கு வயது 18க்கும் குறைவு என்பதால் அவருடைய விவரங்களை இப்போது வெளியிட முடியாது.
அந்த இளைஞர், ஓசிபிசி வாடிக்கையாளர்களைக் குறிவைத்து வெளிநாட்டு கும்பல்கள் அரங்கேற்றிய மோசடிகளுக்கு உதவிய ஒரு கும்பலைச் சேர்ந்தவர் அல்ல என்பது தெரியவந்தது.
என்றாலும்கூட அந்த உதவிக் கும்பலில் இடம்பெற்றிருந்த சிலர், அந்த இளைஞருக்கு நண்பர்களாக இருந்தனர்.
குற்றச்செயல்களில் அந்த நண்பர்களுக்கு அந்த இளைஞர் உதவி செய்து இருக்கிறார்.
ஓசிபிசி வாடிக்கையாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மோசடிகளுடன் தொடர்புடைய அந்தக் கும்பலைச் சேர்ந்த பல உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


