சிங்கப்பூருக்கும் கத்தாருக்கும் ஒத்த கண்ணோட்டம்: அதிபர் ஹலிமா

சிங்கப்பூருக்கும் கத்தாருக்கும் ஒத்த கண்ணோட்டம்: அதிபர் ஹலிமா

2 mins read
0f82559e-73fd-4f03-8025-e6d880e18538
அதிபர் ஹலிமா யாக்கோப் கத்தாரின் தேசிய அரும்பொருளகத்தில் காட்சிப் பொருள்களைப் பார்வையிடுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூருக்கும் கத்தாருக்கும் ஒன்றுக்கு மற்றொன்றின்மீது இயற்கையாகவே நாட்டம் உள்ளதாகவும் அவை ஒரே மாதிரியான உத்திபூர்வ கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளதாகவும் அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியிருக்கிறார்.

கத்தாருக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் ஹலிமா, அதன் தலைநகர் தோஹாவில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற இரவு விருந்து நிகழ்வில் இவ்வாறு தெரிவித்தார்.

“சிறிய நாடுகளான நம்மைச் சுற்றி நிலப்பரப்பிலும் மக்கள்தொகையிலும் நம்மைவிட மிகப் பெரிய அளவிலான அண்டை நாடுகள் உள்ளன. ஆயினும், அனைத்துலகச் சமூகத்தில் துடிப்பான, பொறுப்பான, ஆக்கபூர்வமான உறுப்பினர்களாக இருப்பதற்கும் காலத்திற்கேற்ப நம்மை முன்னிறுத்திக் கொள்வதற்கும் நாம் முயற்சிகள் மேற்கொண்டுவருகிறோம்,” என்று திருவாட்டி ஹலிமா கூறினார்.

கத்தாரில் வசித்துவரும் கிட்டத்தட்ட 300 சிங்கப்பூரர்களில், 250க்கும் மேற்பட்டோர் அந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூரும் கத்தாரும் தொடர்ந்து தடையற்ற வர்த்தகத்தையும் அனைவரையும் உள்ளடக்கிய, விதிமுறைகளின் அடிப்படையிலான பலதரப்பட்ட வர்த்தக அமைப்புமுறையையும் தொடர்ந்து வலுவாக ஆதரிப்பதாய்த் திருவாட்டி ஹலிமா கூறினார்.

அண்மைய ஆண்டுகளில் கத்தார் கணிசமான உருமாற்றங்களைக் கண்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்திய முதல் மத்தியக் கிழக்கு வட்டார நாடு அதுதான். கத்தாரில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியின் வெற்றி, பிரம்மாண்டமான நிகழ்வு ஒன்றை நடத்தி, உலக அளவில் மிளிரக்கூடிய ஆற்றல் ஒரு சிறிய நாட்டிற்கு உண்டு என்பதை எடுத்துக்காட்டியதாக அவர் கூறினார்.

திருவாட்டி ஹலிமா 88,966 பேர் அமரக்கூடிய லுசைல் விளையாட்டரங்கிற்கும் சென்றிருந்தார்.

குறிப்புச் சொற்கள்