தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயங்கரவாதம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்ட பெரும்பாலானோர் மீண்டும் சமூகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்

3 mins read
ec2fa24b-49b0-4a3b-8b67-04ffd8cbf5fb
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான திரு லாரன்ஸ் வோங் ஜூன் 21ஆம் தேதியன்று ஷங்ரிலா ராசா செந்தோசாவில் நடைபெற்ற சமய மறுவாழ்வுக் குழுவின் வருடாந்திர நிகழ்வில் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பயங்கரவாதம் தொடர்புடைய நடவடிக்கைகளில் அங்கம் வகித்த சுமார் 140 சிங்கப்பூரர்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினர் வெற்றிகரமாகச் சமூகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுவிட்டதாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். 58 ‘ஜமா இஸ்லாமியா’ (ஜேஐ) அமைப்பினரில் 53 பேர் ஒருங்கிணைக்கப்பட்டோரில் அடங்குவர் என்றும் அறியப்படுகிறது.

இருப்பினும் இது எளிதில் சாத்தியமாகவில்லை. ஜேஐ அமைப்பினரை 2003ஆம் ஆண்டில் கைது செய்ததை அடுத்து முடிவெடுப்பதில் அரசாங்கம் சிரமத்தை எதிர்நோக்கியது. ‘இந்த நபர்களை என்ன செய்வது?’ என்ற கேள்வியும் எழுந்தது.

பயங்கரவாதிகளின் மறுவாழ்வு தொடர்பிலும் மீண்டும் சமுதாயத்தில் அவர்களை இணைப்பது தொடர்பிலும் அதுவரை எவரும் கேள்விப்படவில்லை. அத்துடன் இந்த விவகாரத்தை மற்ற நாடுகளும் முறையாகக் கையாண்டதாகவும் இல்லை.

“வன்முறைக்கு மாறாக அமைதியை நிலைநாட்டும் ஒரு சமயம் இஸ்லாம். இருப்பினும் இஸ்லாம் தொடர்பில் இந்தப் பயங்கரவாதிகளுக்கு இருந்த புரிந்துணர்வு சிதைந்திருந்ததை நாங்கள் அறிந்தோம்,” என்றார் அவர்.

இந்த நபர்கள் ஜேஐ அமைப்பினர் அல்லது பயங்கரவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, குடும்பங்கள் உள்ளவர்கள், அன்பு காட்டவும் பராமரிப்பு வழங்வும் பெற்றோர், துணைவர் போன்றோர் உள்ளவர்கள். அத்துடன் இவர்களை நம்பியிருக்கும் பிள்ளைகளும் உண்டு என்று சுட்டினார் துணைப் பிரதமர் வோங்.

இந்நிலையில் பயங்கரவாதம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டவர்களை மீண்டும் சமுதாயத்தில் ஒருங்கிணைக்கவும் அவர்களை ஏற்றுக்கொள்ளவும் அரசாங்கம் அதன் சொந்த திட்டத்தை வகுத்தது. இஸ்லாமிய சமூகத் தலைவர்களை அரசாங்கம் நாடி, தடுத்துவைக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் இஸ்லாமின் உண்மை படிப்பினைகளை உணர்த்தவும் உதவுமாறு கோரியது.

இதையடுத்து சமய மறுவாழ்வுக் குழு (ஆர்ஆர்ஜி) அமைக்கப்பட்டது. நேற்று ஷங்ரிலா ராசா செந்தோசாவில் குழுவின் 20வது ஆண்டு நிறைவை அனுசரிக்கும் வருடாந்திர நிகழ்வு நடைபெற்றபோது திரு வோங் பேசினார்.

பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியவை ஏற்படுத்தும் மிரட்டலுக்கு எதிராக அரசாங்கத்துக்கு முக்கியப் பங்காளியாக ஆர்ஆர்ஜி இருந்துவருவதை அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரர்கள் பலரின் மனதிலும் பயங்கரவாதம் இன்று முன்னுரிமை பெறுவதாக இல்லை என்றாலும் தீவிரவாத, பயங்கரவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்படும் மிரட்டல் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது என்றார் துணைப் பிரதமர்.

பயங்கரவாதக் குழுக்கள் அதிநவீன முறையில் சமூக ஊடகம் போன்ற மின்னிலக்கத் தளங்களைப் பயன்படுத்தித் தங்களின் பிரசாரத்தைப் பரப்புவதுடன் தாக்குதல் நடத்துமாறு தூண்டவும் முனைவதைக் காணலாம் என்றார்.

இதனால் பயங்கரவாதம் தொடர்பான ஆவணங்களை எளிதில் பார்வையிட முடிவதுடன் பயங்கரவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்படும் செயல்முறையும் மாதங்கள், வாரங்கள் என விரைவாகிவிட்டது.

இளையரைக் குறிவைக்கும் போக்கு அதிகரிப்பு 

எளிதில் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவர்களாக இளையர்கள் இருப்பதால் இத்தகைய பயங்கரவாதக் குழுக்கள் இளையரை அதிகம் குறிவைக்கத் தொடங்கிவிட்டதாக துணைப் பிரதமர் சுட்டினார்.

வழக்கமான சமூக ஊடகத் தளங்களைத் தவிர இணையத்தில் இயங்கிவரும் இளையருக்கு விருப்பமான இசை, விளையாட்டுத் தளங்களையும் குழுக்கள் குறிவைப்பதாகத் தெரியவந்துள்ளது.

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 2015ஆம் ஆண்டிலிருந்து 21 வயதுக்குக் குறைந்த 11 பேருக்கு பயங்கரவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டதன் தொடர்பில் தடுப்புக் காவல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சிலர் 14 வயதிலேயே பயங்கரவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்படத் தொடங்கினர். 

மக்கள் எச்சரிக்கை காக்கவேண்டும்

 “பயங்கரவாத, வன்முறை சித்தாந்தங்களால் ஈர்க்கப்படும் சிங்கப்பூரர் எந்த வயதாகவும், எந்த இனத்தவராகவும், எந்த சமயத்தவராகவும் இருக்கலாம்,” என்றார் திரு வோங்.

இது இன, சமய வேற்றுமைகள் நிலவும் சிங்கப்பூர் சமூகத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மக்களுக்கிடையே பிரிவினை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு என்றார் அவர்.

பயங்கரவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்படுவோரை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் தொடர்ந்து கண்டறியவும் எதிர்கொள்ளவும் பங்காற்றும் அதேவேளை அரசாங்கமும் மக்களைக் காப்பது தொடர்பில் பங்களிக்கும். இருப்பினும் இணையத்தில் உள்ள அனைத்துக்கும் எதிராக சிங்கப்பூரர்களைத் தற்காக்க முடியாது.

எனவே, பயங்கரவாத சித்தாந்தங்களை அடையாளம் காணவும் அவற்றை எதிர்க்கவும் பொதுமக்கள் சரியான தகவல்களை அறிந்திருக்க வேண்டும். அத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், குறிப்பாக அதிகரித்துவரும் இளையர்களுக்கான மறுவாழ்வு முறைகள் தொடர்ந்து மாற்றம் காண வேண்டும்.

இதற்கிடையே, ஆர்ஆர்ஜி புதிய டிக்டாக் கணக்கைத் தொடங்கியுள்ளது பற்றி நிகழ்வில் அறிவித்தது. இதனால் இளையர்களை எளிதில் சென்றடைவதுடன் அவர்களுக்கு இஸ்லாம் தொடர்பான சரியான புரிதலை ஏற்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

குறிப்புச் சொற்கள்