கட்டுமான இடங்களில் வானூர்தி: இரு நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு

1 mins read
d6f9fb46-9c84-4447-8382-c1d5ebd6954f
படம்: - டிஜேஐ

தேவையான அனுமதியைப் பெறாமல் கட்டுமான இடங்களில் பலமுறை ஆளில்லா வானூர்திகளைப் பறக்கவிட்டதாக இரண்டு நிறுவனங்கள்மீது புதன்கிழமை குற்றம் சுமத்தப்பட்டது.

சைனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி (சிங்கப்பூர் கிளை) என்ற நிறுவனமும் சைனா ஹார்பர் (சிங்கப்பூர்) எஞ்ஜினியரிங் என்ற நிறுவனமும் தலா எட்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றன.

நீதிமன்றத்தில் அந்த இரண்டு நிறுவனங்களின் சார்பிலும் ஒருவர் முன்னிலையானார். அவை வழக்கறிஞரை அமர்த்தவில்லை.

நிறுவனங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளப்போவதாக அவர் கோடிகாட்டினார். ஆகஸ்ட் 2 ஆம்தேதி அவை நீதிமன்றத்தில் முன்னிலையாகி குற்றத்தை ஒப்புக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகாயப் போக்குவரத்துச் சட்டத்தின்படி குற்றவாளிக்கு ஒவ்வொரு குற்றத்திற்கும் $50,000 வரை அபராதம் விதிக்க முடியும்.

குறிப்புச் சொற்கள்
கட்டுமானத் துறை