செய்தித்தாள் விற்பனை எண்ணிக்கையை மிகைப்படுத்தி தெரிவித்த விவகாரம் பற்றிய புலன்விசாரணையில் குற்றங்கள் நிகழ்ந்து இருக்கக்கூடிய வாய்ப்புகள் தெரியவந்ததை அடுத்து எஸ்பிஎச் ஊடகக் குழுமம் காவல்துறையில் புகார் ஒன்றைத் தாக்கல் செய்து இருக்கிறது.
அந்தக் குழுமத்தின் கணக்குத் தணிக்கை, இடர் குழு, அறிக்கை ஒன்றில் பல பரிந்துரைகளைத் தெரிவித்து இருப்பதை அடுத்து காவல்துறையுடன் முழுமையாகத் தான் ஒத்துழைக்கப்போவதாக புதன்கிழமை அந்தக் குழுமம் அறிக்கையில் தெரிவித்தது.
விற்பனை எண்ணிக்கை மிகைப்படுத்தி தெரிவிக்கப்பட்டது பற்றி ஆராயும்படி அந்தக் குழுவை எஸ்எம்டியின் நிர்வாகச் சபை கடந்த ஜனவரியில் கேட்டுக்கொண்டது.
எஸ்பிஎச் ஊடக வெளியீடுகளுக்கான விளக்கக் கூட்டத்தில் பேசிய அந்தக் குழுவின் தலைவர் திரு மேக்ஸ் லோ, காவல்துறையில் தனிப்பட்டவர்களுக்கு எதிராகவோ அல்லது நிறுவனங்களுக்கு எதிராகவோ புகார் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் புலன்விசாரணையின் மூலம் தெரியவந்தவை, அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
காவல்துறை புலன்விசாரணையைக் கவனத்தில் கொண்டு இப்போதைக்கு மேற்கொண்டு எதையும் கூற முடியாது என்று அவர் தெரிவித்தார்.
காவல்துறையில் தாக்கலான புகாரில் தெரிவிக்கப்பட்டு இருக்கும் குறிப்பிடத்தக்க குற்றங்கள் பற்றி கேட்டபோது, குற்றங்களைத் தீர்மானிப்பது தனது குழு அல்ல என்று திரு லோ குறிப்பிட்டார்.
காவல்துறையிடம் முழு அறிக்கையும் இருக்கிறது என்று அவர் கூறினார்.
அந்த அறிக்கை எஸ்பிஎச் ஊடக இணையத்தளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
விற்பனை எண்ணிக்கையை மிகைப்படுத்தி தெரிவித்ததில் செய்தித்துறை, கட்டுரை, தலையங்கத் துறைகள் ஈடுபட்டு இருக்கின்றன என்பதற்கான சாட்சியங்கள் எதுவும் இல்லை என்று அந்த அறிக்கை தீர்மானித்துள்ளது.
இதனிடையே, எஸ்பிஎச் ஊடகம் தன்னுடைய கட்டுப்பாட்டு ஏற்பாடுகளையும் இடர்களை நிர்வகிக்கக்கூடிய தன் ஆற்றலையும் மேம்படுத்தப்போவதாக புதன்கிழமை தெரிவித்தது.


