ஒயர்கார்ட் விவகார விதிமீறல்கள்: 4 நிதி நிறுவனங்களுக்கு $3.8 மி. அபராதம்

ஒயர்கார்ட் விவகார விதிமீறல்கள்: 4 நிதி நிறுவனங்களுக்கு $3.8 மி. அபராதம்

2 mins read
டிபிஎஸ், ஓசிபிசி, சிட்டிபேங்க் சிங்கப்பூர், சுவீஸ் லைஃப் நிறுவனத்திற்கு ஆணையம் விதித்தது
70aa31a3-d9b7-40a2-a445-0508b9713cf6
டிபிஎஸ், ஓசிபிசி, சிட்டிபேங்க் சிங்கப்பூர், சுவீஸ் லைஃப் ஆகியவற்றுக்கு சிங்கப்பூர் நாணய ஆணையம் மொத்தம் $3.8 மில்லியன் அபராதம் விதித்துள்ளது. - கோப்புப்படம்

டிபிஎஸ், ஓசிபிசி, சிட்டிபேங்க் சிங்கப்பூர் ஆகிய மூன்று கடன் அளிக்கும் வங்கிகளுக்கும் சுவீஸ் லைஃப் என்ற காப்புறுதி நிறுவனத்திற்கும் மொத்தம் $3.8 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளைத் தடுக்கும் விதிகளையும் பயங்கரவாதத்திற்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் விதிமுறைகளையும் மீறியதற்காக அந்த அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த விவகாரம், ஒயர்கார்ட் நிறுவன மோசடியுடன் சம்பந்தப்பட்டதாகும்.

இந்த விவரங்களை சிங்கப்பூர் நாணய ஆணையம் புதன்கிழமை தெரிவித்தது.

ஒயர்கார்ட் நிறுவனத்தின் நிதி அறிக்கைகளில் ஒழுங்கீனங்கள் இடம்பெற்று இருப்பதாகவும் ஒயர்கார்ட் விவகாரத்தில் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட நிறுவனங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டதையும் தொடர்ந்து இந்த ஆணையம், அந்த நான்கு நிதி நிறுவனங்களையும் சோதித்தது. அப்போது விதிமீறல்கள் பற்றி தெரியவந்தன.

அந்த நான்கு நிதி நிறுவனங்களிலும் கட்டுப்பாட்டு ஏற்பாடுகள் போதிய அளவுக்கு இல்லை என்பதும் தெரியவந்தது.

விதிமீறல்கள் கடுமையானவை என்றாலும் அந்த நிதி நிறுவனங்களின் எந்தவோர் ஊழியரும் வேண்டுமென்றே தவறான நடத்தையில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை என்று ஆணையம் குறிப்பிட்டு இருக்கிறது.

நான்கு நிதி நிறுவனங்களில் ஒன்றான டிபிஎஸ் வங்கிக்கு, 2015 ஜூலை மாதத்திற்கும் 2020 பிப்ரவரிக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற விதிமீறல்களுக்காக $2.6 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது.

ஓசிபிசி வங்கிக்கு 2015 ஜூன் மாதத்திற்கும் 2016 ஜனவரிக்கும் இடையில் இடம்பெற்ற விதிமீறல்களுக்காக $600,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல, 2019 செப்டம்பருக்கும் 2020 ஜூன் மாதத்திற்கும் இடையில் இடம்பெற்ற விதிமீறல்களுக்காக சிட்டிபேங்க் சிங்கப்பூர் வங்கிக்கு $400,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த 2017 மே மாதம் இடம்பெற்ற விதிமீறல்களுக்காக சுவீஸ் லைஃப் நிறுவனத்திற்கு $200,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கண்டறியப்பட்ட குறைபாடுகளைக் களைய அந்த நான்கு நிதி நிறுவனங்களும் முறையான நிவாரண நடவடிக்கைகளை எடுத்து இருக்கின்றன என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

சிட்டாடெல் என்ற தொழில் நிர்வாக நிறுவனம் பற்றிய தன்னுடைய புலன்விசாரணையை ஆணையம் பூர்த்தி செய்து இருக்கிறது.

ஆனால், இந்த நிறுவனம் விதிகளை மீறவில்லை என்பது தெரியவந்தது. இதன் காரணமாக இந்த நிறுவனத்துக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்கப்படமாட்டா என்று ஆணையம் தெரிவித்தது.

ஒயர்கார்ட் ஆசியா நிறுவனத்தின் இரண்டு முன்னாள் ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதற்கு ஒரு நாள் கழித்து நான்கு நிதி நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்ட தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜெர்மனியின் தொழில்நுட்பத் துறையில் கொடிகட்டிப் பறந்த பணப்பட்டுவாடா நிறுவனமான ஒயர்கார்ட் 2020ல் நொடித்துப்போய்விட்டது.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருந்த பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள அந்த நிறுவனத்தின் சொத்துகள் இல்லாமல் போய்விட்டன. உலகையே உலுக்கிய அந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் இன்னமும் தேடப்பட்டு வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்