திரு முகம்மது ஃபுர்கான் முகம்மது ரஷீத்தை, 25, அவருடைய குடும்பத்தினர் கடைசியாக பார்த்தது கடந்த ஆண்டு டிசம்பரில்.
அவர் விடுப்பு எடுத்துக்கொண்டு கரைக்குத் திரும்பும்போதெல்லாம், அவருடைய குடும்பத்தார் அவருடன் சேர்ந்து பொன்னான நேரத்தை ஒன்றாகச் செலவிடுவர்.
ஆனால், அமெரிக்க நீர்ப்பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றிலிருந்து திரு ஃபுர்கான் விழுந்துவிட்டதாக புதன்கிழமை காலை 6.30 மணிக்கு அவருடைய குடும்பத்தாருக்கு தொலைபேசியில் தகவல் வந்தது.
அந்தச் செய்தியை ஏற்பது இன்னமும் கடினமாகவும் ஏதோ கெட்ட கனவுபோல இருப்பதாகவும் திரு ஃபுர்கானின் மூத்த சகோதரர் ஃபத்துல் இஸ்லாம் முகம்மது ரஷீத், 27, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
“இதை ஏற்பது மிகவும் கடினமாக இருக்கிறது. நம்பிக்கையுடன் காத்திருப்பதைத் தவிர்த்து எங்களால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை,” என்றார் அவர்.
இந்நிலையில், ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சு, திரு ஃபுர்கானின் குடும்பத்தாருடன் தான் தொடர்பில் இருப்பதாகக் கூறியது.
“நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து, சிரமமான இந்த நேரத்தில் அவரது குடும்பத்துக்குத் தேவையான ஆதரவை நாங்கள் வழங்குவோம்,” என்று அமைச்சு குறிப்பிட்டது.
அமெரிக்க நீர்ப்பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றிலிருந்து விழுந்த சிங்கப்பூரர் ஒருவரைக் காணவில்லை என்று பெரித்தா மீடியாகார்ப் நிறுவனம் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இளநிலை கப்பல் சரக்கு அதிகாரியாவதற்கு திரு ஃபுர்கான் பயிற்சி வகுப்பில் ஈடுபட்டிருந்ததாக அவருடைய நண்பர் முகம்மது ஃபாரிஸ் கூறினார்.
இச்சம்பவம் குறித்து ஃபேஸ்புக்கில் புதன்கிழமை பகிர்ந்த அவர், “கடலில் காணாமல்போன என் உற்ற நண்பருக்காக பிரார்த்தனை செய்யுமாறு கனத்த இதயத்துடன் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்,” என்று பதிவிட்டார்.
“தேடுதல், மீட்புப் பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருகின்றன. ஆனால், பெருங்கடல் பரந்து விரிந்திருப்பதால் தேடுதல் பணி கடினமாகவும் சிக்கலாகவும் உள்ளது,” என்றார் அவர்.
திரு ஃபுர்கானின் சகோதரி நூர் அஃபிஃபா முகம்மது ரஷீத்தும் தம் சகோதரரின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் பிரார்த்திக்குமாறு மக்களிடம் புதன்கிழமை கேட்டுக்கொண்டார்.
ஆனால், லாஸ் ஏஞ்சலிஸ் டெய்லி நியூஸ் தளத்தைப் பொறுத்தமட்டில், காணாமல்போன படகோட்டியைத் தேடி, மீட்க கிட்டத்தட்ட 15 மணி நேரத்துக்குப் பிறகு அமெரிக்க கரையோரக் காவல் படை செவ்வாய்க்கிழமை மாலை (அமெரிக்க நேரப்படி) நிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அச்செய்தியில் திரு ஃபுர்கானின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
தேடுதல், மீட்புப் பணி ஒருங்கிணைப்பாளரான தலைமை வாரன்ட் அதிகாரி ஜான் ரோஸ், “தேடுதல் பணியை நிறுத்திவைப்பது எளிதாக எடுக்கப்பட்ட முடிவல்ல. காணாமல்போனவரைத் தேடுவதற்காக கடுமையான முயற்சி எடுக்கப்பட்ட பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
“கப்பல் பணியாளரின் நண்பர்களுக்கும் குடும்பத்துக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்றார்.


