தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மஞ்சள் தரநிலையில் செங்காங் நகர மன்றம்

2 mins read
a3eb6646-59e4-4c70-aeaa-7fa22a537ac9
செங்காங் நகர மன்றம் மட்டும் புதிய அறிக்கையில் தர வரிசையில் குறைத்து மதிப்பிடப்பட்டு உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய வளர்ச்சி அமைச்சு, நகரமன்ற நிர்வாகம் பற்றிய ஆகப் புதியதோர் அறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்டது.

அதில் மதிப்பிடப்பட்ட நான்கு துறைகளில் ஒன்றைத் தவிர 17 நகர மன்றங்களும் பசுமைத் தர வரிசையைப் பெற்று இருக்கின்றன.

செங்காங் நகர மன்றம் மட்டும் புதிய அறிக்கையில் தரவரிசையில் குறைத்து மதிப்பிடப்பட்டு உள்ளது.

சேவை, பராமரிப்புக் கட்டண நிலுவைகளை நிர்வகிப்பதன் தொடர்பிலான அதன் செயல்திறன் மதிப்பிடப்பட்டதில் அந்த மன்றத்துக்கு இந்த நிலை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

முந்தைய நிதி ஆண்டில் மூன்று நகர மன்றங்கள் இத்தகைய நிலைக்கு ஆளாயின என்பது குறிப்பிடத்தக்கது.

செங்காங் நகர மன்றத்தின் மாதாந்திர சேவை, பராமரிப்புக் கட்டணத்தில் 40 விழுக்காட்டிற்கு மேற்பட்ட தொகை நிலுவையில் இருந்தது. இதற்காக அந்த மன்றத்திற்குக் குறைந்த தரநிலை வழங்கப்பட்டது.

சேவை, பராமரிப்புக் கட்டணங்களில் 40 விழுக்காட்டுக்கும் குறைவான தொகை நிலுவையில் இருந்தால், மூன்று மாத காலம் அல்லது அதற்கு அதிக காலத்திற்கு 100 குடும்பங்களில் நான்கிற்குக் குறைவான குடும்பங்கள் அந்தத் தொகையைச் செலுத்தாமல் இருந்தால் நகர மன்றங்களுக்கு பச்சை தரவரிசை கொடுக்கப்படுகிறது.

தேசிய வளர்ச்சி அமைச்சு வெளியிட்ட அறிக்கை 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரைப்பட்ட 2022ஆம் நிதி ஆண்டிற்குரியது.

நகர மன்றங்களும் அவற்றின் கணக்குத் தணிக்கை நிறுவனங்களும் தாக்கல் செய்த விவரங்களின் அடிப்படையில் நான்கு பிரிவுகளின்கீழ் நகர மன்றங்களுக்குத் தரவரிசை அளிக்கப்பட்டது.

பச்சை, மஞ்சள், சிவப்பு என்று மூன்று நிலைகளில் தரவரிசை அளிக்கப்பட்டு இருக்கிறது.

குடியிருப்புப் பேட்டையின் துப்புரவு நிலை, பேட்டை நிர்வாகம், மின்தூக்கிச் செயல்திறன் ஆகியவை மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இதர மூன்று துறைகள் ஆகும்.

இந்தத் துறைகளைப் பொறுத்தவரை, முன்பைபோலவே இப்போதும் அனைத்து நகர மன்றங்களும் பசுமைத் தரநிலையைப் பெற்று இருக்கின்றன.

சுவா சூ காங் நகர மன்றமும், ஜூரோங்-கிளமெண்டி நகர மன்றமும் 2021 நிதி ஆண்டில் சேவை, பராமரிப்புக் கட்டண நிலுவைத் துறையில் மஞ்சள் நிற தரவரிசையைப் பெற்றிருந்தன.

அம்மூன்று மன்றங்களும் இப்போது புதிய அறிக்கையில் பசுமை தரநிலையைப் பெற்று முன்னேறியுள்ளன.

இதனிடையே, நகர மன்றங்களின் 2022 நிதி ஆண்டுக்கான நிறுவன ஆளுமை நிலையைக் காட்டும் அறிக்கை விவரங்கள் 2023 டிசம்பரில் வெளியிடப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சு தெரிவித்து இருக்கிறது.

நகர மன்றங்களின் தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கைகளையும் அவற்றின் கணக்குத் தணிக்கையாளர்களின் அறிக்கைகளையும் பெற்று அவற்றைப் பரிசீலித்த பிறகு தேசிய வளர்ச்சி அமைச்சு இந்த விவரங்களை வெளியிடும்.

2021 நிதி ஆண்டிற்கான நகர மன்ற ஆளுமை அறிக்கை சென்ற ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்டது.

இரண்டு நகர மன்றங்கள், நகர மன்ற விதிகளுக்கு உட்பட்டு நடக்கவில்லை என்பது அதில் தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்