தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுவர்களுக்கான இருமொழி விழா

2 mins read
9954707b-8909-47e7-b2c7-f0e4abeabd0c
பல விருதுகளை வாங்கிய எழுத்தாளர் அழகுநிலா நான்கு வயது முதல் எட்டு வயது வரையிலான சிறுவர்களுக்குத் தான் எழுதிய ‘கொண்டாம்மா கெண்டாமா’, ‘வண்ணப்பெண்’ ஆகிய இரு சிறுவர் நூல்களை வாசித்தார். - படம்: ஆர்ட்ஸ் ஹவுஸ்

ரச்சனா வேலாயுதம்

சிறுவர்களிடையே இரு மொழித் திறனை வளர்க்க ‘மோண்ஸ்ட்ரோஸ் ஃபன்’ எனும் ஆண்டுதோறும் நடக்கும் கொண்டாட்டம் சென்ற வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை இரு நாட்களிலும் நடந்தன.  

தி ஆர்ட்ஸ் ஹவுஸ் இடத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் சிறுவர்களுக்காக பற்பல உற்சாகமூட்டும் விளையாட்டுகள் நடந்தன. ‘மொன்ஸ்டர் ஹண்ட்’ என்ற தேடல் விளையாட்டு ஒன்றும் அவர்களுக்கு நடத்தப்பட்டது. 

பல விருதுகளை வாங்கிய எழுத்தாளர் அழகுநிலா நான்கு வயது முதல் எட்டு வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று இந்நிகழ்ச்சியை வழிநடத்தினார். அவர் எழுதிய ‘கொண்டாம்மா கெண்டாமா’, ‘வண்ணப்பெண்’ ஆகிய இரு சிறுவர் நூல்களை சிறுவர்களுக்கு அவரே வாசித்தார்.

‘கொண்டாம்மா கெண்டாமா’ கதை கெண்டாமா என்ற ஜப்பானிய விளையாட்டுப் பொருளைத் திருடும் சிறுவனைப் பற்றியது. ‘வண்ணப்பெண்’ கதை இயற்கையைத் தனது சுயநலத்திற்காக அழிக்கும் சிறுமியைப் பற்றியது. 

தமிழ்ப் புத்தகங்கள் ஒரு குழந்தையின் ஆளுமையில் முக்கிய பங்காற்றுவதோடு மொழி வளத்தை அதிகரித்து தனது இனத்தின் வேர்களை அறிந்து கொள்ளவும் கலாசார, பண்பாட்டு விழுமியங்களைக் கற்றுக் கொள்ளவும் உதவுகின்றன என்று அழகுநிலா கூறினார்.  

“ஒரு குழந்தையின் வளர்ச்சியில் முதல் ஏழு ஆண்டுகள் முக்கியமான பருவம் ஆகும். இந்தக் காலகட்டத்தில் தாய்மொழியை அறிமுகப்படுத்துவதிலும் அதன் மீதான பிணைப்பை உருவாக்குவதிலும் பெற்றோரின் பங்கு முக்கியமானது.

“இது போன்ற கூட்டு வாசிப்புகளும் குழந்தைகளுக்கான நிகழ்வுகளை குழந்தைகளே வழி நடத்துதலும் சமூக அளவில் பயனுள்ள செயல்பாடுகளாக இருக்கும்,” என்பதை எழுத்தாளர் அழகுநிலா கூறினார். 

அடுத்த நாள் ‘கருப்பும் சிவப்பும் அழகோ அழகு’ என்ற தலைப்பில் ஜெயசுதா சமுத்திரன் எழுதிய கதையைப் பகிர்ந்துகொண்டார். 

தோல் நிறத்தால் ஏற்படும் பாகுபாடுகளைப் பற்றி சிறுவர்களுக்கு எளிமையான முறையில் எடுத்துக் கூறும் இந்நூல் அகிலா என்ற சிறுமியைப் பற்றியது.

ஏழு வயதிலிருந்து 12 வயது வரையுள்ள குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் இக்கதையைக் கேட்டு மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சிகள் ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் நடத்தப்பட்டது. 

rachv@sph.com.sg 

‘மோண்ஸ்ட்ரோஸ் ஃபன்’ நிகழ்ச்சி நடைபெற்ற இடம்.
‘மோண்ஸ்ட்ரோஸ் ஃபன்’ நிகழ்ச்சி நடைபெற்ற இடம். - படம்: ஆர்ட்ஸ் ஹவுஸ்
சிறுமிக்கு முகமூடியில் வண்ணம் தீட்டக் கற்றுத் தரப்படுகிறது.
சிறுமிக்கு முகமூடியில் வண்ணம் தீட்டக் கற்றுத் தரப்படுகிறது. - படம்: ஆர்ட்ஸ் ஹவுஸ்
குறிப்புச் சொற்கள்