குழந்தையின் சடலத்தைப் புதைக்க பதின்ம வயதுப் பெண்ணைத் தூண்டியதாக 17 வயது மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
வயது குறைந்த பெண்ணுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்த குற்றமும் நேற்று அவர் மீது சுமத்தப்பட்டது. சிறு வயதினரின் அடையாளத்தைக் காக்கும் பொருட்டு அவர்களைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
பதின்ம வயது சிறுமிக்குக் குழந்தை பிறந்ததை மறைக்க குழந்தையின் சடலத்தை ரகசியமாக அப்புறப்படுத்தி அச்சிறுமியை ஏமாற்றியதாக அந்த இளையர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தெரிவிக்கிறது. 2021 ஜூனில் அச்சம்பவம் நிகழ்ந்தபோது சிறுமியின் வயது 16. அந்த ஆண்டு ஜூன் 10ஆம் தேதி ஓர் இடத்தில் குழந்தையின் சடலத்தைப் புதைக்க சிறுமியை அந்த இளையர் தூண்டியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, 2020 ஜூலையில் சிறுமிக்கு 15 வயது இருந்தபோது வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் அச்சிறுமியுடன் அந்த இளையர் பாலியல் உறவு கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த இளையர் இன்னும் பள்ளியில் படிப்பதாகவும் பிணையில் வெளியில் இருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் கூறினார். ஆகஸ்ட் 7ஆம் தேதி அந்த இளையர் மீண்டும் நீதிமன்றம் வரவேண்டும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குழந்தையை அப்புறப்படுத்தியதன் மூலம் குழந்தை பிறந்ததை மறைக்க முயன்ற குற்றத்திற்கு ஈராண்டு சிறை, அபராதம் ஆகியன விதிக்கப்படலாம். வயது குறைந்த பெண்ணுடன் பாலியல் உறவு கொண்ட குற்றத்திற்கு 20 ஆண்டு சிறையும் அபராதம் அல்லது பிரம்படியும் விதிக்கப்படலாம்.

