ஜோகூரின் சன்வே இஸ்கந்தர் நகரிலுள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் உணவு விநியோக ஓட்டுநருடன் நடந்த தகராறு தொடர்பில் சிங்கப்பூரர்கள் இருவரை மலேசியக் காவல்துறையினர் தேடுகின்றனர்.
இணையத்தில் பரவிய இந்தச் சம்பவத்தை விசாரணை செய்ய குற்றவியல் சட்டப்பிரிவு 506ன்கீழ் வழக்கு பதிந்துள்ளதாக இஸ்கந்தர் புத்ரி காவல்துறைத் தலைவர் ரஹ்மாட் அரிஃபின் தெரிவித்தார். இந்தச் சம்பவம் ஜூன் 16ஆம் தேதி நிகழ்ந்தது.
“புலனாய்வின் அடிப்படையில், புகாரளித்தவர் தனது மோட்டார்சைக்கிளில் பெட்ரோல் நிரப்ப நெடுநேரம் எடுத்துக்கொண்டதால் அவருக்கும் சந்தேகப் பேர்வழிகள் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
“அந்தச் சந்தேகப் பேர்வழிகள் சிங்கப்பூரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சிங்கப்பூர் காவல்துறையின் உதவியுடன் அவ்விருவரையும் கண்டுபிடிக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
“இந்தச் சம்பவத்தைப் பற்றி எதையும் ஊகிக்கவேண்டாம் எனப் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கிறோம். தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை அணுகி விசாரணைக்குத் துணைபுரியுமாறும் கேட்டுக் கொள்கிறோம்,” என்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதன் தொடர்பிலான மேல்விவரங்களுக்கு சிங்கப்பூர் காவல்துறையுடன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டுள்ளது.
உணவு விநியோக ஓட்டுநருக்கும் சந்தேகப் பேர்வழிகளுக்கும் இடையிலான வாக்குவாதத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
சம்பந்தப்பட்ட ஓட்டுநர் அந்தச் சம்பவத்தைப் பற்றி காவல்துறையிடம் புகார் செய்தபோதிலும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டாமென முடிவு செய்ததாகத் திரு ரஹ்மாட் புதன்கிழமை கூறியிருந்தார்.


