தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெய்லர் ஸ்விஃப்ட் ரசிகர்களுக்குக் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் விடுத்த சவால்

2 mins read
f0e40552-ad09-4d72-b1e8-e21e6dffd989
அமெரிக்கப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

அமெரிக்கப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் உள்ளூர் ரசிகர்களுக்குக் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் சவால் விடுத்திருக்கிறார்.

‘புத்தாக்கமும் முனைப்பும் மிக்க ரசிகர்’ எவரேனும் தனது பள்ளியில் இலவசமாக நிகழ்ச்சி படைக்க டெய்லர் ஸ்விஃப்டை வெற்றிகரமாக வரவழைத்தால், அதற்கடுத்த நாள் பள்ளி விடுமுறை அறிவிக்க பள்ளிக்குக் கல்வி அமைச்சு அனுமதி அளிக்கும் என்று திரு சான் வெள்ளிக்கிழமை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

அனைத்துலக பாப் இசைப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சிங்கப்பூரில் நிகழ்ச்சி படைக்க வருகிறார். நிகழ்ச்சி நடைபெறும் தேதிகளைப் பள்ளி விடுமுறை நாளாக அறிவிக்குமாறு கல்வி அமைச்சருக்குப் பல கோரிக்கைகள் கிடைத்ததால், இந்தச் சவாலை அவர் விடுத்திருக்கிறார்.

டெய்லர் ஸ்விஃப்ட்டின் ரசிகர்கள் கோரும் பள்ளி விடுமுறைக்குக் கல்வி அமைச்சு அனுமதி அளித்தால், கோல்டுபிளே, பிளாக்பிங்க், பிடிஎஸ், பியான்சே போன்ற மற்றப் பிரபலங்களின் ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பது பற்றிய அக்கறையால் இந்தச் சவாலை விடுத்ததாகத் திரு சான் கூறினார்.

“சில வெளிநாட்டுச் செய்திகள் கூறுவதுபோல் பணவீக்க உயர்வுக்கு இது இட்டுச்செல்லுமோ என்ற கவலையும் எனக்கிருக்கிறது,” என்றார் அவர்.

33 வயது டெய்லர் ஸ்விஃப்ட் 2024 மார்ச் 2 முதல் 4 வரை தேசிய அரங்கத்தில் மூன்று நிகழ்ச்சிகளைப் படைக்கவிருப்பதாகப் புதன்கிழமை நள்ளிரவு அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய இரு ஆசிய நாடுகளில் மட்டுமே அவர் இம்முறை நிகழ்ச்சி படைக்கவுள்ளார்.

குறிப்புச் சொற்கள்