தஞ்சோங் பகாரில் ஃபூஜி ஜெராக்ஸ் டவர்ஸ் இடத்தில் ஜூன் 15ஆம் தேதி கட்டட இடிப்பு வேலை நடந்தபோது ஒரு சுவர் விழுந்ததில் 20 வயது ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டார்.
அந்த ஊழியர் அந்த வேலை இடத்திற்கு வெளியே உள்ள நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவர் மீது சுவர் விழுந்துவிட்டது என்று வேலையிடப் பாதுகாப்புச் சுகாதார மன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இரண்டாவது மாடியில் இருந்து அந்த கான்கிரீட் சுவர் வினோத் குமார் என்ற அந்த ஊழியர் மீது விழுந்துவிட்டது. பின்னர் அவரின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. அவர் மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
கட்டடங்களை இடிக்கும் வேலை என்பது கட்டுமான வேலைகளில் அதிக ஆபத்துள்ள வேலையாகும். கட்டடம் எந்த வகையில் இடிக்கப்படும் என்பதை விவரிக்கும் அறிக்கை ஒன்றை நிபுணத்துவ பொறியாளர் ஒருவர் தயாரிக்க வேண்டும் என்று மன்றம் தெரிவித்தது.
அந்த அறிக்கை சுவர், கூரை, கான்கிரீட் சட்டங்கள், உத்திரங்கள் முதலானவற்றின் உறுதியை தெள்ளத்தெளிவாகத் தெரியப்படுத்த வேண்டும்.
கட்டடத்தின் ஒவ்வொரு பகுதியின் வெவ்வேறான வடிவமைப்புகளையும் உள்ளமைப்புகளையும் அது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க நிறுவனங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த மன்றம், கட்டடங்களை இடிப்பதற்கான திட்டங்களைத் தீட்டி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்றும் கூறியது.
கட்டடம் இடிக்கப்படும் முறை பற்றி சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். வேலை பாதுகாப்பு பற்றியும் அவர்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
வேலையிடத்தில் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றன என்பதற்கான வேலை அனுமதி ஏற்பாடு ஒன்றும் நடப்பில் இருக்க வேண்டும்.
இடிப்பு வேலைகளை மேற்பார்வை செய்து அவை அந்த அறிக்கையின்படி பாதுகாப்பான முறையில் நடைபெறுகின்றன என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
சிங்கப்பூர் கட்டட, கட்டுமான ஒப்பந்தக்காரர்கள் சங்கம் நடத்தும் கட்டட இடிப்பு பாதுகாப்பு பயிற்சிப் படிப்பில், ஆலோசனை பிரதிநிதிகளும் மேற்பார்வை ஊழியர்களும் கட்டடங்களை இடிக்கும் ஒப்பந்தக்காரர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் மன்றம் தெரிவித்துள்ளது.