630 அரசுப் பேருந்துகள் புதுப்பொலிவு பெறும்

630 அரசுப் பேருந்துகள் புதுப்பொலிவு பெறும்

2 mins read
adc2c6e0-f49f-428d-93e9-31410339e544
சிங்கப்பூரில் சேவை வழங்கும் அரசு பேருந்துகளில் 630 பேருந்துகள் புதுப்பொலிவு பெறவிருக்கின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் சேவை வழங்கும் கிட்டத்தட்ட 630 அரசாங்கப் பேருந்துகள் பத்து ஆண்டு பழமையானவையாக ஆகிவிட்டன. ஆகையால் அவை புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவு பெற இருக்கின்றன.

அந்தப் பணிகளை மேற்கொள்ளத் தோதாக ஒப்பந்தக்காரர் ஒருவரை நியமிக்க நிலப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை ஒப்பந்தப் புள்ளிக்கு விளம்பரம் செய்தது.

பேருந்து இருக்கைகளை மாற்றுவது, தரை விரிப்புகளை மாற்றுவது, சன்னல்கள், கண்ணாடிகளில் பசை ஓட்டுவது, பேருந்துக் கதவுகளில் பகுதிப் பொருள்களைப் பொருத்துவது முதலானவை அந்தப் பணிகளில் உள்ளடங்கும்.

புதுப்பொலிவு பெற இருக்கின்ற 630 பேருந்துகளில் மாடிப் பேருந்துகளும் அடங்கும். பணிகள் 2023ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடையில் நடக்கும் என்று ஆணையம் விளக்கியது.

நியமிக்கப்படும் ஒப்பந்தக்காரரின் ஆற்றல் வளங்களைப் பொறுத்து ஒரு பேருந்தில் புதுப்பிப்புப் பணிகள் முடிய பொதுவாக ஒரு வாரம் பிடிக்கும் என்று தெரிகிறது.

ஒப்பந்த நிறுவனத்தோடும் பேருந்து சேவை வழங்கும் நிறுவனங்களோடும் சேர்ந்து செயல்பட்டு மேம்பாட்டுப் பணிகளுக்கான கால அட்டவணையை ஆணையம் வகுக்கும்.

பேருந்துச் சேவைகளில் பாதிப்பு இல்லாமல் அவை வழக்கமாக இடம்பெறுவதை ஆணையம் உறுதிப்படுத்தும்.

பேருந்துகளில் பொதுவாக ஏற்படக்கூடிய தேய்மானங்களைச் சரிசெய்து பேருந்துகள் நல்ல நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தவே இந்தப் பணிகள் இடம்பெறுவதாக ஆணையம் மேலும் தெரிவித்தது.

புதுப்பொலிவு காண இருக்கும் அனைத்து பேருந்துகளும் டீசலில் இயங்குபவை. அவை ஆயுள் முழுவதும் தொடர்ந்து சேவையாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் அரசாங்கப் பேருந்துகள் 17 ஆண்டு காலம் சேவையில் ஈடுபடுத்தப்படும். பிறகு அவை சாலைகளை விட்டு அகற்றப்படும்.

அனைத்து அரசாங்கப் பேருந்துகளும் 2040வது ஆண்டு வாக்கில் கரிமக் கழிவற்ற எரிபொருளில் செயல்பட வேண்டும் என்பதை இந்த ஆணையம் இலக்காக நிர்ணயித்து இருக்கிறது. 50 விழுக்காட்டுப் பேருந்துகள் 2030வது ஆண்டு வாக்கில் மின்சாரப் பேருந்துகளாக மாறும்.

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு மே மாத நிலவரப்படி, ஏறக்குறைய 5,800 அரசுப் பேருந்துகள் சேவையாற்றி வந்தன. அவற்றின் சராசரி வயது எட்டு ஆண்டுகள்.

குறிப்புச் சொற்கள்