சிங்கப்பூரில் பயனீட்டுப் பொருள்களின் விலைகள் மே மாதம் சரிந்தன. உணவு, சில்லறை வர்த்தகம், தனியார் போக்குவரத்துச் செலவினத்தில் குறைவு ஏற்பட்டது.
பயனீட்டுப் பொருள்களின் மூலாதார பணவீக்கம் ஆண்டுக்காண்டு அடிப்படையில் கடந்த மே மாதம் 4.7% கூடியது. இந்தப் பணவீக்கம் தனியார் போக்குவரத்து, குடியிருப்புச் செலவினங்களை நீக்கிவிட்டு கணக்கிடப்படுகிறது.
ஆகையால், இது சிங்கப்பூர் குடும்பங்களின் செலவுகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பொருளியல் வல்லுநர்களை உள்ளடக்கி ஆய்வு ஒன்றை நடத்தி இருந்தது. அதில் தெரிவிக்கப்பட்ட எதிர்பார்ப்புகளையொட்டி மே மாதம் பணவீக்கமும் இருந்தது. மூலாதார பணவீக்கம் ஏப்ரல் மாதம் 5% கூடியிருந்தது.
ஒட்டுமொத்த பணவீக்கம் மே மாதம் 5.1% ஆகக் குறைந்தது. தனியார் போக்குவரத்து, சேவைகள், உணவு ஆகியவற்றுக்கான செலவில் குறைவு ஏற்பட்டது.
இந்தப் பணவீக்கம் ஏப்ரல் மாதம் 5.7% ஆக இருந்தது. பொருளியல் வல்லுநர்கள் ஒட்டுமொத்த பணவீக்கம் மே மாதம் 5.5% ஆக இருக்கும் என்று கணித்து இருந்தார்கள்.
ஆனால், இந்தக் கணிப்பைவிட அந்த மாதத்தில் ஒட்டுமொத்த பணவீக்கம் குறைவாகவே இருந்தது.
இந்த ஆண்டில் ஒட்டுமொத்த பணவீக்கம் 5.5%க்கும் 6.5%க்கும் இடைப்பட்டு இருக்கும். மூலாதார பணவீக்கம் 3.5%க்கும் 4.5%க்கும் இடைப்பட்டு இருக்கும் என்பது அதிகாரபூர்வ கணிப்பாக இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த மதிப்பீடுகள், ஜனவரி 1ஆம் தேதி நடப்புக்கு வந்த ஜிஎஸ்டி வரி உயர்வை கருத்தில்கொண்டு செய்யப்பட்டுள்ளன.
மூலாதார பணவீக்கம் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் மேலும் மெதுவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
மின்சாரம், எரிவாயுவைத் தவிர இதர அனைத்து பிரிவுகளிலும் கடந்த மே மாதம் பணவீக்கம் குறைந்தது.
மின்சாரம், எரிவாயுச் செலவு மே மாதம் 3.3% அதிகரித்தது. இது, ஏப்ரலில் 2.7% ஆக இருந்தது.
தனியார் போக்குவரத்துச் செலவினம் மாதாந்திர அடிப்படையில் மே மாதம் மிகவும் குறைவாக இருந்தது. அது 10.4%லிருந்து 7.2% ஆக இறங்கியது.
உணவுப்பொருள் பணவீக்கம் மே மாதம் 6.8% ஆகக் குறைந்தது. அதேபோல, சேவைத் துறை பணவீக்கம் 3.9% ஆக இறங்கியது.
குடியிருப்புச் செலவினம் மே மாதம் 4.7% குறைந்தது. இது ஏப்ரலில் 4.9% ஆக இருந்தது. சில்லறை, இதர பொருள்களுக்கான பணவீக்கம் கொஞ்சம் குறைந்து 2.8% ஆக இருந்தது.


