சிங்கப்பூரைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் புனித யாத்திரிகர்கள் சாங்கி விமான நிலையத்தில் தங்கள் விமானத்திலேயே நான்கு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டி இருந்தது.
பிறகு விமானத்தைவிட்டு இறங்கும்படி அவர்களிடம் வெள்ளிக்கிழமை காலை தெரிவிக்கப்பட்டதாக பெரித்தா ஹரியான் செய்தித்தாள் தெரிவித்தது.
அந்த யாத்திரிகர்கள் ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொண்டு சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்குச் செல்லவிருந்தார்கள். சவூதியா எஸ்வி3621 என்ற விமானம் சாங்கி விமான நிலையத்தைவிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்குப் புறப்பட்டு நண்பகல் 12 மணிக்கு ஜெட்டாவில் தரையிறங்கவிருந்தது.
விமானத்திலிருந்து தரையிறங்கும்படி காலை 9 மணியளவில் பயணிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இருந்ததாகத் தெரியவந்தது.
நள்ளிரவில் விமான நிலையத்திற்குத் திரும்பி வந்து சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்குப் புறப்படும் விமானத்தில் புறப்பட்டுச் செல்லலாம் என்று பயணிகளிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் குறிப்பிட்டன.

