விரைவுச்சாலை விபத்தில் ஓட்டுநர் மரணம்

விரைவுச்சாலை விபத்தில் ஓட்டுநர் மரணம்

1 mins read
9440dbd6-6492-4b92-b4a1-b221f1ad82f7
இந்த விபத்தில் இரு கார்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்தது. - படம்: எஸ்ஜிஆர்வி அட்மின்/ஃபேஸ்புக்

மாற்றொரு காருடன் மோதி பலமுறை புரண்டு கவிழ்ந்ததில் ஓட்டுநர் ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இந்த விபத்தின் காரணமாக அவர் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டார்.

சாங்கியை நோக்கிச்செல்லும் தீவு விரைவுச்சாலையில் புக்கிட் தீமா சாலை வெளிச்சாலைக்குப் பிறகு நிகழ்ந்த இந்த விபத்து குறித்து இரவு 9 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் கிடைத்தது.

விபத்து நிகழ்ந்த இடத்துக்கு ஆம்புலன்ஸ் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது. அங்கு 33 வயது ஓட்டுநர் ஒருவர் அசைவின்றிக் கிடந்தார். அவர் இறந்துவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ உதவியாளர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் இரு கார்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்தது.

விபத்தில் சிக்கிய மற்றொரு கார் ஓட்டுநரான 33 வயது ஆடவரும் காரில் இருந்த 23 வயது மாதும் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தனர்.

ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில், இந்த விபத்து காரணமாக சிதைவுகள் விரைவுச்சாலையில் சிதறிக் கிடந்தது தெரிந்தது.

விபத்து நிகழ்ந்த இடத்தில் ஏறக்குறைய 20 காவல்துறை அதிகாரிகள் காணப்பட்டதாக ஷின் மின் சீன நாளிதழிடம் பேசிய ஒருவர் கூறினார்.

விபத்து காரணமாக அப்பகுதியில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
விபத்து