ரஷ்யாவில் தற்போது மூண்டிருக்கும் உள்நாட்டு ஆயுத போராட்த்தைத் தொடர்ந்து தலைநகர் மாஸ்கோவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் சிங்கப்பூரர்களைப் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளது.
சிங்கப்பூரர்கள் வீட்டிற்குள்ளே இருக்கும்படியும், உள்நாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறும் அது கேட்டுக்கொண்டது.
தற்போது ரஷ்யாவின் தெற்குப் பகுதிகளில் பதற்றமும் பாதுகாப்பு பிரச்சினையும் நீடிக்கிறது.
தூதரகம் ஏற்கெனவே சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட பயண அறிவுரையை சுட்டிக்காட்டியது. உக்ரேன், ரஷ்யாவின் கிராஸ்னோடார், தென்மேற்கு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அமைச்சு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கேட்டுக்கொண்டது.
ரஷ்யாவில் உள்ள சிங்கப்பூரர்கள் அவர்களது சொந்த பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவும் eregister.mfa.gov.sg என்ற இணையப்பக்கத்தில் தங்களது தகவல்களை பதிவுசெய்துகொள்ளுமாறும் தூதரகம் கேட்டுக்கொண்டது.
உதவி தேவைப்படுபவர்கள் 7-499-241-37-02 என்ற எண்ணிற்கோ அல்லது 24 மணி நேரம் செயல்படும் அவசர உதவி எண்ணான 7-906-009-00-69க்கோ தொடர்புகொள்ளலாம்.
போராட்டப் படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின் தென் ரஷ்ய நகரான ரூஸ்டவ்வான்டானை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சனிக்கிழமை தெரிவித்தார்.
தலைநகர் மாஸ்கோவில் இருந்து அந்நகரம் கிட்டத்தட்ட 1,100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மாஸ்கோவை நோக்கி வரும் சாலைகளில் பாதுகாப்புப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நகரில் இடம்பெறவிருந்த பெரும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

