அமெரிக்கப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அவர் சிங்கப்பூரில் ஆறு நிகழ்ச்சிகளைப் படைக்கவிருக்கிறார்.
இதற்கு முன்னர் டெய்லர் ஸ்விஃப்ட் மூன்று நிகழ்ச்சிகள் தான் படைப்பதாக இருந்தது. ஆனால் இப்போது அது ஆறு நிகழ்ச்சிகளாக கூடியுள்ளது.
முதல் மூன்று நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச் சீட்டுகள் வாங்குவதற்கான முன்பதிவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து இப்போது மேலும் மூன்று நிகழ்ச்சி அதிகரித்துள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சி மார்ச் 2,3, 4, 7, 8, 9 ஆகிய தேதிகளில் தேசிய விளையாட்டரங்கத்தில் நடக்கிறது.
டெய்லர் ஸ்விஃப்ட் பாடுவதை நேரில் கண்டு ரசிக்க சிங்கப்பூரில் உள்ள அவரது ரசிகர்கள் மட்டுமன்றி இவ்வட்டார நாடுகளில் உள்ள ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை சிங்கப்பூரிலும் ஜப்பானிலும் மட்டுமே டெய்லர் ஸ்விஃப்ட் நிகழ்ச்சி படைக்கிறார். அவரது நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளின் குறைந்தபட்ச விலை $108.
சிங்கப்பூரில் நடைபெறும் அவரது நிகழ்ச்சியை நேரில் காண 200,000க்கும் மேற்பட்டோர் திரள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சியைக் காண வெளிநாடுகளிலிருந்து வரும் ரசிகர்களால் சிங்கப்பூரின் பொருளியல் பலனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பிரிட்டிஷ் இசைக்குழு ‘கோல்ட்பிளே’ படைக்கும் ஆறு நிகழ்ச்சிகளாலும் உள்ளூர் சுற்றுப்பயணத்துறை பலனடையும் என்று கூறப்படுகிறது.
அடுத்த மாதம் பிரபல ஹாங்காங் பாடகர் ஜேக்கி சுங் சிங்கப்பூரில் நிகழ்ச்சி படைக்கிறார். ஆசிய நாடுகளில் உள்ள இவரது ரசிகர்கள் நிகழ்ச்சியை நேரில் காண சிங்கப்பூர் வருகின்றனர். அவர் நடத்தும் ஒன்பது நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் விற்கப்பட்டுவிட்டன.

