ஈசூன் விபத்தில் ஆடவர் மரணம்: கார் ஓட்டுநர் கைது

ஈசூன் விபத்தில் ஆடவர் மரணம்: கார் ஓட்டுநர் கைது

1 mins read
225c1941-8416-4742-b924-c2f47a4635db
ஈசூன் அவென்யூ 9ல் ஞாயிறு காலை நிகழ்ந்த விபத்தில் மின் சைக்கிளோட்டி உயிரிழந்தார். - படம்: ஷின் மின்

ஈசூனில் மின் சைக்கிள் சம்பந்தப்பட்ட விபத்தின் தொடர்பில் கார் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

மரணம் விளைவிக்கக்கூடிய ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய சந்தேகத்தின் பேரில் அந்த 43 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் ஈசூன் அவென்யூ 9ல் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அது கூறியது. விபத்து காரணமாக காரின் முன்பகுதி வளைந்துவிட்டதாகவும் முன்பக்கக் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதாகவும் சீன நாளிதழான ஷின் மின் தெரிவித்தது.

மின் சைக்கிளை ஓட்டிச் சென்ற 59 வயது ஆடவர் விபத்தில் சிக்கினார். உணர்வற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் மாண்டதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, அவரது இதய செயல்பாட்டை மீட்பதற்கான முதலுதவி சிகிச்சையை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் துணை மருத்துவர்கள் மேற்கொண்டதாகவும் அந்த நாளிதழ் குறிப்பிட்டது.

விபத்து தொடர்பாக காவல்துறை விசாரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
விபத்து