தொழிற்சாலை உற்பத்தி 10.8% சரிவு

தொழிற்சாலை உற்பத்தி 10.8% சரிவு

2 mins read
34ccedff-4be0-4834-9e58-e6aa44c5c845
மின்னணுவியல் துறையினுள், பகுதி மின்கடத்திப் பிரிவில் உற்பத்தி 26.8 விழுக்காடு குறைந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் உற்பத்தி தொடர்ந்து எட்டாவது மாதமாக கடந்த மே மாதம் குறைந்தது. மின்னணுவியல் உற்பத்தி சரிந்ததால் ஆண்டு அடிப்படையில் மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவு சரிந்தது.

ஓராண்டிற்கு முன்பிருந்ததைவிட கடந்த மாதம் தொழிற்சாலை உற்பத்தி 10.8 விழுக்காடு சரிந்தது. 2019 நவம்பரில் அது 12.3 விழுக்காடு சரிந்து இருந்தது.

பொருளியல் வளர்ச்சிக் கழகம் திங்கட்கிழமை வெளியிட்ட தரவில் இது தெரியவந்தது.

உயிர்மருத்துவ உற்பத்தித் துறையைத் தவிர்த்து, கடந்த மாதம் உற்பத்தி ஆண்டு அடிப்படையில் 13 விழுக்காடு குறைந்தது.

பருவத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட மாத அடிப்படையில், உற்பத்தி 3.9 விழுக்காடு சுருங்கியது. உயிர்மருத்துவ உற்பத்தித் துறையைத் தவிர்த்து, ஏப்ரலுடன் ஒப்புநோக்க அது 8 விழுக்காடு குறைந்தது.

சிங்கப்பூரின் உற்பத்தித் துறையில் 45 விழுக்காடு பங்கு வகிக்கும் மின்னணுவியல் துறையே ஆக மோசமாக செயல்பட்டது. ஆண்டு அடிப்படையில் கடந்த மாதம் அது 23 விழுக்காடு சரிந்தது.

மின்னணுவியல் துறையினுள், பகுதி மின்கடத்திப் பிரிவில் உற்பத்தி 26.8 விழுக்காடு குறைந்தது. கணினித் துணை சாதன, தரவு சேகரிப்புப் பிரிவில் உற்பத்தி 26.6 விழுக்காடு குறைந்தது.

போக்குவரத்துப் பொறியியல், உயிர்மருத்துவ உற்பத்தியைத் தவிர்த்து, உற்பத்திப் பிரிவுகள் அனைத்திலும் உற்பத்தி ஆண்டு அடிப்படையில் குறைந்தது.

துல்லியப் பொறியியல் துறையில் உற்பத்தி கடந்த மாதம் ஆண்டு அடிப்படையில் 10.5 விழுக்காடு சரிந்தது.

ரசாயனத் துறையில் உற்பத்தி ஆண்டு அடிப்படையில் கடந்த மாதம் 9.5 விழுக்காடு இறங்குமுகம் கண்டது. பொது உற்பத்தி 0.3 விழுக்காடு குறைந்தது.

ஒப்புநோக்க, போக்குவரத்துப் பொறியியல் துறையில் உற்பத்தி 28.4 விழுக்காடு ஏற்றம் கண்டது. ஏப்ரலில் அந்த ஏற்றம் 14.5 விழுக்காடாகப் பதிவானது.

உயிர்மருத்துவ உற்பத்தியும் ஆண்டு அடிப்படையில் கடந்த மாதம் 4.4 விழுக்காடு உயர்ந்தது.

குறிப்புச் சொற்கள்