சிங்கப்பூரிலிருந்து வெளிநாடுகளுக்குப் புறப்படும் பயணிகளில் கூடுதலானோர் ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் முன்கூட்டியே உடைமைகளைப் பதிவுசெய்து வருகின்றனர்.
கடந்த மாதம் அங்கு ஏறக்குறைய 14,000 பயணிகள் அவ்வாறு செய்தனர். ஏப்ரலில் பதிவான எண்ணிக்கையைவிட இது சுமார் 40 விழுக்காடு அதிகம் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது.
எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் கடந்த ஆண்டு மே மாதம் ஓய்விடம் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு முன்கூட்டியே உடைமைகளைப் பதிவுசெய்யும் பயணிகளின் எண்ணிக்கை நிலையாக அதிகரித்து வந்துள்ளதாக சாங்கி கூறியது.
ஜூன் மாதம் இதுவரை 500க்கும் மேற்பட்ட பயணிகள் அன்றாடம் ஜுவல் சாங்கியில் உடைமைகளைப் பதிவுசெய்யும் வசதியைப் பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக, ஜூன் 4ஆம் தேதி கிட்டத்தட்ட 800 பயணிகள் அதைப் பயன்படுத்தினர்.
கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பு 2019 மே மாதம் ஜுவல் சாங்கியில் உடைமைகளைப் பதிவுசெய்யும் வசதியை அன்றாடம் கிட்டத்தட்ட 600 பயணிகள் பயன்படுத்தினர்.


