தாயும் மகளும் சேர்ந்து மியன்மார் நாட்டைச் சேர்ந்த பணிப்பெண்ணைத் துன்புறுத்திக் கொலை செய்த வழக்கில் கண்காணிப்பு கேமராக் காட்சிகளை அகற்றிய குற்றம் தொடர்பில், அந்தத் தாய்க்குக் கூடுதலாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் திங்கட்கிழமை அவ்வாறு தீர்ப்பளித்தது.
64 வயது பிரேமா எஸ்.நாராயணசுவாமி, பீஷானில் உள்ள தங்கள் வீட்டில் இருந்த குற்றங்களுக்கான ஆதாரங்களை மறைக்கும்படி காவல்துறை அதிகாரியான 44 வயது கெவின் செல்வத்தைத் தூண்டியதை ஒப்புக்கொண்டார். ஜூன் 15 ஆம் தேதி அவர் அதை ஒப்புக்கொண்டார்.
முன்னதாக, 24 வயது பணிப்பெண் பியாங் ங்காய் டானைத் துன்புறுத்தியதாக 47 குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டன. அவற்றை பிரேமா ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவருக்கு விதிக்கப்பட்ட கூடுதல் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையை அவர் முந்தைய 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக நிறைவேற்ற வேண்டும்.
இருப்பினும், “பணிப்பெண் பியாங்க்கு பிரேமா இழைத்த கொடுமையின் தன்மைக்கும் ஆதாரங்களை மறைக்க அவர் எடுத்த முயற்சிக்கும் முன்னர் அவருக்கு வழங்கப்பட்ட 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை போதுமானதாக இல்லை,” என்று முதன்மை மாவட்ட நீதிபதி ஜில் டான் கூறினார்.
கண்காணிப்பு கேமராவில் அவர் செய்த குற்றங்கள் பதிவாகியிருந்ததால் தன்னுடைய மருமகன் செல்வத்திடம் கேமராவில் இருந்த பதிவுசெய்யும் சாதனத்தைத் துண்டித்து, அதைத் தன்னிடம் தருமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் அதைத் தன் மருமகள் இஸபெல்லாவிடம் கொடுத்து அப்புறப்படுத்தும்படி கூறினார்.
கேமராப் பதிவின் முக்கியத்துவம் குறித்து அறியாத இஸபெல்லா அதைத் தன் கணவரிடம் கொடுத்தார். பின்னர் காவல்துறையினர் அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது அவர்கள் அதிகாரிகளிடம் அதை ஒப்படைத்தனர்.
கண்காணிப்பு கேமரா பதிவில் பிரேமாவும் அவர் மகளும் அந்தப் பணிப்பெண்மீது குளிர்ந்த நீரை ஊற்றியது, அவரை அடித்தது, காலால் எட்டி உதைத்தது, இழுத்துத் தள்ளியது, மிதித்தது உள்ளிட்டவை பதிவாகியிருந்தன.
சிங்கப்பூரில் இல்லப் பணிப்பெண் தான் இருக்கும் வீட்டின் முதலாளிகளால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்குகளில் இதுவும் ஒன்று.
தொடர்புடைய செய்திகள்
செல்வத்தின் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அவ்வழக்கு ஜூலை மாதம் விசாரணைக்கு வரும். பணிப்பெண் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காவல்துறையிலிருந்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.