எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் மூன்று வாரங்களுக்கு முன்னரே வட்டபாதை ரயில் சேவைகள் செவ்வாய்க்கிழமை வழக்கநிலைக்குத் திரும்பும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமை தெரிவித்தது.
மே மாதம் நடைபெற்ற தனது வழக்கமான சோதனை நடவடிக்கையின்போது, புரோமெனாட்டுக்கும் நிக்கல் ஹைவேய்க்கும் இடைப்பட்ட வட்டப்பாதை ரயில் சேவையின் சுரங்கப்பதை கடும் அழுத்தத்தை எதிர்நோக்குவதாக ஆணையம் கண்டறிந்தது.
இது, வட்டபாதை ரயில் சேவைகளுக்குப் பாதுகாப்பு அபாயங்கள் ஏற்படுத்தாது என்றாலும் முன்னெச்சரிக்கை பராமரிப்பு மற்றும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளாக சுரங்கத்தில் உள்ள இரும்பு வளையங்களுக்கு வலு சேர்க்கும் அம்சங்கள் போன்றவை மேற்கொள்ளப்படும் என்று ஆணையம் கூறியது.
இது குறித்து மே மாதத்தில் அறிக்கை வெளியிட்ட ஆணையம், ஜூன் 11 முதல் ஜூலை 20ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறும் என்பதால், வட்டபாதை ரயில் சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகள் தங்கள் பயணத்தில் 30 நிமிடம் வரை தாமதத்தை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்தது.
டோபி காட், பிராஸ் ராசா, எஸ்பிளனேட், புரோமினாட், நிக்கல் ஹைவே, மரினா பே, பேஃபிரண்ட் ஆகிய ஏழு நிலையங்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கும்.
“பராமரிப்புப் பணிகள் திட்டமிடப்பட்டதற்கு முன்கூட்டியே வேகமாக நடந்து வருவது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். அந்தப் பணிகள் இன்றிரவு முடிவடைந்துவிடும். கடந்த ஒரு மாதமாக பொறுமை காத்ததற்கு நன்றி கூறுகிறோம்,” என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது.

