தேன்நிலவுக்குச் செல்லவிருந்த மணப்பெண் அரிய நோயால் தாக்கப்பட்டார்

தேன்நிலவுக்குச் செல்லவிருந்த மணப்பெண் அரிய நோயால் தாக்கப்பட்டார்

2 mins read
ab3ae253-4a68-4ac7-8c0d-da46dec5715c
தனது தேன்நிலவுக்குத் தயாராகிக்கொண்டிருந்த திருவாட்டி நுருல் ஜன்னா முகம்மது நஸ்‌ரி, மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. - படம்: நுருல் ஜன்னா முகம்மது நஸ்‌ரி

தனது வாழ்க்கையில் தமது திருமணமே மிக மகிழ்ச்சியான தருணம் என்று எண்ணியிருந்த 25 வயது நுருல் ஜன்னா முகம்மது நஸ்‌ரி, திருமணத்துக்குப் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் முன்னரே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவரது தேன்நிலவுப் பயணம் ரத்து செய்யப்பட்டது.

திருமணத்துக்கு ஒரு வாரம் இருக்கும்போது, அந்த பாலர்பள்ளி ஆசிரியரின் இடது கண்ணின் பின்புறம் வலி ஏற்பட்டது. ஆனால், அது வழக்கமான ஒற்றைத் தலைவலி என்று அவர் விட்டுவிட்டார்.

பின்னர் அவரது பார்வை மங்கலானது. அவரது பார்வையின் நடுப்பகுதியில் சாம்பல் நிலக் கோடு தென்பட்டதும் நூருல் சற்று பயந்துவிட்டார். அப்போதும் அவர் அதை நிராகரித்து திருமண வேலைகளில் மூழ்கினார்.

குடும்பம், நண்பர்கள் ஆகியோருடன் திருமணக் கொண்டாட்டத்தை முடித்த நூருலின் பார்வை மேலும் மங்கலானதுடன் அவரது தலைவலி மோசமானது. அவர் தம் கணவரிடம் தம் நிலை பற்றி கூறினார்.

“அடுத்த நாள் தேன்நிலவுப் பயணத்துக்கு என்னால் செல்ல முடியுமா என்று கவலைப்பட்டேன். ஒரு மருத்துவரைக் காண என் கணவர் என்னை வற்புறுத்தினார்,” என்றார் நூருல்.

நூருலின் பெற்றோர் அவரை தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த கண் மருத்துவ நிபுணர்கள், பார்வை நரம்பு அழற்சி ஏற்பட்டிருப்பதாகவும் அதனால்தான் அவரது பார்வை மங்கலானது என்றும் அவர் உடனடியாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று ஆலோசனை கூறினர்.

“என் கணவரை நினைத்து நான் மிகவும் கவலைப்பட்டேன். நாங்கள் பார்த்து பார்த்து எங்கள் தேன்நிலவுக்கு ஏற்பாடு செய்தோம். அதற்காக பணம் சேமித்து வைத்தோம். நான் பல முறை அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர் எனது உடல்நலம் தான் முக்கியம் என்று எனக்கு ஆறுதல் கூறினார்,” என்றார் நூருல்.

பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு நூருல், MOG ஆன்டிபாடி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். அந்நோய் மத்திய நரம்பு மண்டலத்தை குறிவைக்கிறது.

இந்நோய்க்குத் தீர்வு என்பது எல்லை என்றாலும் அதைச் சமாளிக்க சிகிச்சைகள் உள்ளன. இப்போதைக்கு நூருல், அன்றாடம் மருத்துகளை உட்கொண்டு நிலைமையைச் சமாளிக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்