பிடோக் காவல்துறை பிரிவுக்கு அருகில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கிலிருந்து புகை வெளிவருவதைப் பார்த்த காவல்துறை துணை ஆய்வாளர் (ஏஎஸ்பி) அகமது குசைய்ரி ஜுரைமி, உடனே அவ்விடத்துக்கு விரைந்தார்.
பிடோக் நார்த் அவென்யூ 4ல் உள்ள தேசிய சிறுநீரக அறநிறுவன ரத்த சுத்திகரிப்பு நிலையத்துக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனிநபர் நடமாட்டச் சாதனத்தில் தீ மூண்டிருந்தது. நிலையத்துக்குள் கடும் நோய்வாய்ப்பட்டவர்கள் உட்பட பல நோயாளிகள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தனர்.
தமது சக காவல்துறை அதிகாரி ஒருவருடன் அங்கு சென்ற 58 வயது அகமது, நிலையத்திலிருந்த நான்குக்கு மேற்பட்ட ரத்த சுத்திகரிப்பு நோயாளிகளை வெளியே கொண்டு வந்தனர். அவர்களில் சிலர் படுக்கையுடன் வெளியே கொண்டு வரப்பட்டனர்.
“பல நோயாளிகள் படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்ததால், அவர்களை வெளியே கொண்டு வர நான்கு, ஐந்து முறை உள்ளே செல்ல வேண்டியிருந்தது. அதற்கு கிட்டத்தட்ட 40 நிமிடம் ஆனது,” என்றார் கடந்த 40 ஆண்டுகளாக சிங்கப்பூர் காவல்துறையில் பணிபுரியும் அந்த மூத்த பயிற்றுவிப்பு அதிகாரி.
அவரது இந்த தீரச் செயலுக்காக ஏஎஸ்பி அகமதுக்கு ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற காவல்துறை ஆணையாளர் பாராட்டு விழா 2023ல் உயரிய விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. இந்த விருதை மற்ற இருவருடன் திரு அகமது பெற்றார்.
இச்சம்பவம், 2021, நவம்பர் 15ஆம் தேதி மாலை 4 மணிக்கு நிகழ்ந்தது.
ஏஎஸ்பி அகமதும் அவரது சக அதிகாரியும் நோயாளிகளை சுத்திகரிப்பு நிலையத்தில் பின்புறம் உள்ள பேட்மிண்டன் மைதானத்துக்குக் கொண்டு சென்ற சில நிமிடங்களில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் அங்கு வந்தனர்.
“சரியான நேரத்தில் நாங்கள் அங்கு இருந்ததால், எங்களால் நோயாளிகளைக் காப்பாற்ற முடிந்தது. இச்சம்பவம் இளம் காவல்துறை அதிகாரிகளுக்கு உற்சாகத்தை அளித்து, மக்கள் சேவைக்கு முன்னுரிமை அளிக்கும் மனப்போக்கை வலுப்படுத்தும் என நம்புகிறேன்.
தொடர்புடைய செய்திகள்
“வயதான என்னைப் போன்ற அதிகாரிகள் மக்களின் உயிரைக் காப்பாற்ற முடிகிறது என்றால், இளம் அதிகாரிகளான அவர்களால் நிச்சயம் முடியும் என்ற ஊக்கத்தை அவர்களுக்கு அளிக்கக்கூடும்,” என்றார் ஏஎஸ்பி அகமது.
மொத்தம் 9 தனிநபர்கள், 11 குழுக்கள், மூன்று உயர் பாராட்டு விருதுகள் ஜூன் 23ஆம் தேதி விழாவில் அதிகாரிகளின் மிகச் சிறந்த சேவைக்காகவும், பணிக்காகவும், தலைமைத்துவத்துக்காகவும் வழங்கப்பட்டன.

