இயந்திர மனித தொழில்நுட்பம், மின்னிலக்க நாணயங்கள் போன்ற புதுப்புது தொழில்நுட்பங்கள் மூலம் நிதித்துறை நிலைப்பாட்டிற்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளை நிர்வகிக்க உலகம் முழுவதும் செயல்படும் ஒழுங்குமுறை அதிகாரிகள் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்று சிங்கப்பூரின் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் வலியுறுத்திக் கூறி இருக்கிறார்.
நிதித்துறை தொழில்நுட்பங்களும் ஆக்ககரமான இயந்திர மனித ஆற்றலும் மிகப் பெரும் பலன்களை ஏற்படுத்தித் தரும் என்பதில் ஐயமில்லை.
அதேவேளையில், அவை தவறான நோக்கத்தில் பயன்படுத்தப்பட்டு பரவலான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது என்பதை திரு ஹெங் குறிப்பிட்டார்.
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் திங்கள்கிழமை திரு ஹெங் இதனை தெரிவித்தார்.
அதிவேகமாக இடம்பெறக்கூடிய புத்தாக்கங்கள் தொடர்பான ஆபத்துகளை நல்ல முறையில் நாம் நிர்வகிக்கவில்லை என்றால் அதேபோல அதிவேகத்தில் பாதிப்புகளும் ஏற்படலாம் என்று அவர் எச்சரித்தார்.
மத்திய வங்கிகள், ஒழுங்குமுறை அதிகாரிகள், தொழில்துறைத் தலைவர்கள் ஆகியோருக்கு இடையில் ஆண்டுதோறும் கொள்கை மற்றும் தொழில்நுட்பக் கருத்தரங்கு நடந்து வருகிறது. சூரிச் நகரில் நடந்த அந்தக் கருத்தரங்கில் திரு ஹெங் உரையாற்றினார்.
மின்னிலக்கப் பொருளியலில் நிதித்துறை தொழில்நுட்பங்களை முன்னோக்கி கொண்டு செல்ல ஏதுவாக அரசாங்க, தனியார் துறைகளுக்கு இடையில் பகிரங்கமான கலந்துரையாடலைப் பேணி வளர்க்கும் நோக்கத்தில் சிங்கப்பூர் நாணய ஆணையம் ‘இலிவாண்டி’ என்ற அமைப்பை அமைத்து இருக்கிறது.
அந்த அமைப்பும் அனைத்துலக நிதித்துறைக்கான சுவிட்சர்லாந்து அரசாங்கச் செயலகமும் அந்தக் கருத்தரங்கிற்குக் கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன.
தொடர்புடைய செய்திகள்
‘கருத்தரங்கில் மத்திய வங்கிகளின் பிரமுகர்கள், ஒழுங்குமுறை அதிகாரிகள், தொழில்முனைவர்கள், தொழில்துறைத் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
“இவர்கள் அனைவரின் ஆற்றலையும் தொலைநோக்கு கண்ணோட்டங்களையும் ஒன்று திரட்டி நிதித்துறைத் தொழில்நுட்பங்களை நன்மைக்கான ஒரு பலமாக உருவாக்க முடியும்,” என்று பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங் தெரிவித்தார்.
நிதித்துறைத் தொழில்நுட்பங்கள் மூலம் வங்கிச் சேவைகளை எட்டுவதற்கான வழிகள் மேம்பட்டு இருக்கின்றன. வாடிக்கையாளர்களுக்குப் பெரும் வசதிகள் ஏற்பட்டுள்ளன.
பூமியைக் காப்பதற்குத் தேவைப்படும் சுற்றுச்சூழல் முதலீடுகள் தொடர்பிலும் நிதித்துறைத் தொழில்நுட்பங்கள் உதவ முடியும்.
இருந்தாலும் இணைய மோசடிகள், தில்லுமுல்லுகள், புத்தாக்கங்களைப் பாதகமான செயல்களுக்காகப் பயன்படுத்தக்கூடிய ஆபத்துகள் போன்ற மிரட்டல்களை வெற்றிகரமான முறையில் சமாளிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றும் திரு ஹெங் குறிப்பிட்டார்.
பாதுகாப்பான முறையில், பொறுப்புள்ள முறையில் இயந்திர மனிதப் பயனீட்டைப் பேணி வளர்ப்பதில் ஒழுங்குமுறை அதிகாரிகளும் தொழில்துறைத் தலைவர்களும் தங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.
பொறுப்புள்ள, பாதுகாப்பான இயந்திர மனித ஏற்பாட்டு முறையைப் பலப்படுத்துவதில் சிங்கப்பூர் ஏற்கெனவே பல முயற்சிகளை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

