ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறையை முன்னிட்டு சிங்கப்பூர்-மலேசியா நில வழி எல்லைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கக்கூடும் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதனால் வாகனமோட்டிகள் உச்ச நேரங்களில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் காத்திருக்கக்கூடும் என்றும் அது கூறியது.
வியாழக்கிழமை ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறை, அதனால் புதன்கிழமை முதல் திங்கட்கிழமை வரை உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று ஆணையம் குறிப்பிட்டது.
ஜூன் மாதம், பள்ளி விடுமுறை காரணமாக இரண்டு சோதனைச் சாவடிகளிலும் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் இருந்தன. ஜூன் 16ஆம் தேதி மட்டும் 430,000க்கும் அதிகமானவர்கள் சோதனைச் சாவடிகள் வழி பயணம் மேற்கொண்டனர்.
ஜூன் 16க்கும் ஜூன் 18க்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் 1.2 மில்லியன் பயணிகள் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நிலவழி மூலம் பயணம் மேற்கொண்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
பள்ளிகள் ஜூன் 26ஆம் தேதி திறக்கப்பட்டன, அதனால் ஜூன் 24 க்கும் ஜூன் 24க்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் 1.1 மில்லியன் பயணிகள் நிலவழி சோதனைச் சாவடி வழி பயணம் மேற்கொண்டனர்.
எல்லைகளைக் கடப்பவர்கள் ‘ஒன்மோட்டாரிங்’ என்னும் இணையப்பக்கத்தில் போக்குவரத்து நிலைமையைக் கண்காணித்து பயணம் மேற்கொள்ளுமாறு ஆணையம் கேட்டுக்கொண்டது.
வாகனமோட்டிகள் சாலை விதிமுறைகளை சரியாகப் பின்பற்றுமாறும் வரிசைகளில் இடையூறு ஏற்படுத்தாமல் இருக்குமாறும் அது அறிவுறுத்தியது.