தனியார் துறை இதய நோய் மருத்துவரான டாக்டர் வோங் சியோங் சங்குக்கு மருத்துவ கண்காணிப்பு அமைப்பான சிங்கப்பூர் மருத்துவ மன்றம் (எஸ்எம்சி) பல்வேறு தடைகளை விதித்துள்ளது.
பதினெட்டு மாதங்கள் வரை அல்லது அவருக்கு எதிரான புகார்களுக்குத் தீர்வு காணப்படும் வரை தடைகள் நீடிக்கும் என்று இடைக்கால உத்தரவில் மன்றம் தெரிவித்துள்ளது.
டாக்டர் வோங் சியோங் சங்குக்கு மொத்தம் ஆறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்கும் நிறுவனத்துக்கு பரிசு, தரகுப்பணம், அன்பளிப்பு வழங்கக் கூடாது என்பது தடைகளில் ஒன்றாகும்.
ஹெல்தி ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் சென்டர், 111 சோமர்செட்டில் உள்ள சோமர்செட் இமேஜிங் சென்டர் ஆகிய இரண்டு இடங்களில் டாக்டர் வோங் மருத்துவ சேவைகள் வழங்கி வருகிறார்.
2021 ஆகஸ்ட் மாதத்தில் சிங்கப்பூர் மருத்துவ மன்றத்திற்கு டாக்டர் வோங்குக்கு எதிரான புகார்கள் வந்தன.
அவருக்கு எதிரான புகார்கள் என்ன என்பதை சிங்கப்பூர் மருத்துவ மன்றம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் டாக்டர் வோங் மீதான புகார்களை விசாரணைக் குழு விசாரித்தது.
தொடர்புடைய செய்திகள்
அந்த விசாரணையில் பொதுமக்களை பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முடிவு செய்ய இடைக்கால உத்தரவுக் குழு ஒன்றை அமைக்குமாறு எஸ்எம்சியிடம் விசாரணைக் குழு கேட்டுக் கொண்டது.
மருத்துவ சேவை வழங்க டாக்டர் வோங்குக்கு தடை விதிக்கப்படவில்லை. அதே சமயத்தில் அவருக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மருத்துவமனை அல்லது அதன் நிர்வாகத்தின்கீழ் கொண்டுவரப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே அவர் சிகிச்சை அளிக்க வேண்டும், ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு பரிசோ, அன்பளிப்போ வழங்கக்கூடாது, மருத்துவ சேவை வழங்கும் இடங்களை மன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் போன்றவை கட்டுப்பாடுகளில் சில.
இந்தக் கட்டுப்பாடுகள் பதினெட்டு மாதங்கள் அல்லது புகார்களுக்குத் தீர்வு காணப்படும் வரை அமலில் இருக்கும் என்று சிங்கப்பூர் மருத்துவ மன்றம் தெரிவித்துள்ளது.

