கால்வாயில் கார் கவிழ்ந்து ஆடவர் உயிரிழப்பு

கால்வாயில் கார் கவிழ்ந்து ஆடவர் உயிரிழப்பு

1 mins read
569b49d6-f7a1-4281-a97a-8bef487dc040
விபத்து குறித்து திங்கட்கிழமை அதிகாலை 4.53 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது. - காணொளிப்படம்: ஃபேஸ்புக்/எஸ்ஜிஆர்வி
Google News Preferred Icon

சாலையில் வழுக்கிச் சென்று, கால்வாய்க்குள் கார் விழுந்ததில் 55 வயது ஆடவர் ஒருவர் மாண்டுபோனார்.

இச்சம்பவம் திங்கட்கிழமை காலை நிகழ்ந்தது.

இவ்விபத்து குறித்து அதிகாலை 4.53 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

துவாசை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில், மத்திய விரைவுச்சாலைக்குப் பிரியும் துணைச்சாலையில் அந்த கார் வழுக்கிச் சென்றதாகக் கூறப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்தில் பல அவசரகால வண்டிகள் இருந்ததையும் போக்குவரத்து இடதோரத் தடத்திற்கு மாற்றிவிடப்பட்டதையும் ‘எஸ்ஜி ரோடு விஜிலன்ட்’ ஃபேஸ்புக் குழுவின் காணொளி காட்டியது.

துணைச்சாலைக்கு அருகே இருந்த கால்வாயில் கார் குப்புறக் கவிழ்ந்து, பகுதியளவு கால்வாயில் மூழ்கியிருந்ததைக் கண்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

அதனையடுத்து, பேரிடர் உதவி, மீட்புக் குழுவின் முக்குளிப்பாளர்கள் நீர்ப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பின்னர் காரின் ஓட்டுநர் இருக்கையில் இருந்து அந்த ஆடவர் மீட்கப்பட்டார்.

அதன்பின் அவரைப் பரிசோதித்த துணை மருத்துவப் படையினர் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

விபத்து தொடர்பில் காவல்துறை விசாரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
விபத்துவிரைவுச்சாலைசிங்கப்பூர்