சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) தலைமை நிர்வாகி கோ சூன் போங்கின் ஆண்டு வருமானம், 2023 மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்த நிதியாண்டில் 86 விழுக்காடு உயர்ந்து $6.7 மில்லியன் ஆனது.
முந்தைய ஆண்டில் அவரது வருமானம் $3.6 மில்லியனாக இருந்தது. எஸ்ஐஏ புதன்கிழமை வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விமானப் போக்குவரத்துத் துறையில் நிலவிவந்த வலுவான தேவை, தொடர் மீட்சி காரணமாக எஸ்ஐஏவின் நிகர லாபம் சாதனை அளவாக $2.16 பில்லியனை எட்டியது. ஒப்புநோக்க, இதற்கு முந்தைய நிதியாண்டில் எஸ்ஐஏவுக்கு நிகர இழப்பு $962 மில்லியனாகப் பதிவானது.
சிங்கப்பூரை 109 இடங்களுடன் இணைக்கும் எஸ்ஐஏ, மொத்தம் 188 விமானங்களை இயக்கி வருகிறது. 2022/23 நிதியாண்டில் ஏறக்குறைய 26.5 மில்லியன் பேர் எஸ்ஐஏவில் பயணம் மேற்கொண்டனர்.
எஸ்ஐஏ குழுமத்தில் தற்போது ஏறத்தாழ 24,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஆண்டு அடிப்படையில் இந்த எண்ணிக்கை 12.3 விழுக்காடு அதிகம்.


