ரிடவ்ட் ரோடு பங்களா வாடகை: அமைச்சர்கள் சண்முகம், விவியன் தவறிழைக்கவில்லை

பிரதமர் லீ சியன் லூங் உத்தரவின்பேரில் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு (சிபிஐபி) மேற்கொண்ட விசாரணையில் ரிடவ்ட் ரோடு அரசாங்க சொத்துகளின் வாடகை தொடர்பில் அமைச்சர்கள் கா.சண்முகம், விவியன் பாலகிருஷ்ணன் இருவரும் ஊழல் அல்லது குற்றவியல் தவறு ஏதும் இழைத்ததற்கான ஆதாரம் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சிபிஐபியையும் தொடர்புபடுத்தி முதன்முறையாக ஜூன் 28ஆம் தேதியன்று தகவல் வெளியாகியுள்ளது. சிபிஐபியின் விசாரணை அறிக்கையை பிரதமர் லீ ஜூன் 28 மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதனுடன் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் மேற்கொண்ட மறுஆய்வு அறிக்கையும் இணைக்கப்பட்டிருந்தது.

பிரதமர் லீயிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அமைச்சர்களுக்கும் அவர்களின் துணைவியருக்கும் சிறப்புச் சலுகைகள் ஏதும் தரப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டது. கறுப்பு, வெள்ளை பங்களா வீடுகள் இரண்டின் வாடகைப் பரிவர்த்தனைச் செயல்முறையிலும் ரகசியத் தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்றும் கண்டறியப்பட்டது.

“அமைச்சர்கள் தங்களின் சொந்த லாபத்துக்காக பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதற்கான ஆதாரம் ஏதும் இல்லை,” என்று சிபிஐபி தெரிவித்துள்ளது.

சிபிஐபி பிரதமருக்குக்கீழ் நேரடியாக இயங்குவதாலும் ஊழல், குற்றவியல் தவறு ஏதேனும் நடந்துள்ளதா என்பதை உறுதிசெய்யும் முக்கிய அதிகாரம் இருப்பதாலும் விவகாரம் குறித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிபிஐபிக்கு பிரதமர் லீ உத்தரவிட்டிருந்தார்.

இருப்பினும், சட்ட, உள்துறை அமைச்சர் சண்முகத்திற்கு வாடகைக்கு விடப்பட்ட 26, ரிடவ்ட் ரோடு பங்களா தொடர்பில் சிங்கப்பூர் நில ஆணையத்தின் (எஸ்எல்ஏ) ‘வழிகாட்டி வாடகை’ எனும் கூற்றின் பயன்பாட்டில் துல்லியம் இல்லை என்பதை சிபிஐபி கண்டறிந்துள்ளது.

அதனால், இந்த வழிகாட்டி வாடகைக்கும் மேலாக திரு சண்முகம் வாடகை தர முன்வந்தார் என எஸ்எல்ஏ மே 12ஆம் தேதியன்று வெளியிட்ட முந்திய அறிக்கை தவறானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்தச் சொத்துக்கான சரியான வழிகாட்டி வாடகைக்கு நிகராக அமைச்சர் சண்முகம் வாடகை செலுத்தினார் என்பதே உண்மை,” என்று சிபிஐபி அதன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

சம்பந்தப்பட்ட எஸ்எல்ஏ அதிகாரிகள் எவரது தீய நோக்கத்தாலும் இந்த விவகாரம் ஏற்படவில்லை என்றும் கண்டறியப்பட்டது. அத்துடன், இந்தச் சொத்து மதிப்பீட்டில் பதவியை வேண்டுமென்றே தவறாகப் பயன்படுத்தியதற்கான ஆதாரமும் இல்லை என்று கூறப்பட்டது.

இரண்டு பரிவர்த்தனைகள் தொடர்பிலும் அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள், தனியார்த் துறை இடைத்தரகர்கள் தங்களின் பணியை முறையாகச் செய்ததாக மூத்த அமைச்சர் டியோவின் அறிக்கையும் உறுதிசெய்துள்ளது.

“அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியோ அல்லது அமைச்சர் பதவிக்கும் சொந்த நலனுக்கும் இடையிலான முரண்பாடு காரணமாகவோ அமைச்சர்கள் நியாயமற்ற சாதகநிலையையோ சிறப்புச் சலுகையையோ பெறவில்லை,” என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், குடியிருப்பு நோக்கத்திற்காக கறுப்பு-வெள்ளை பங்களாக்களை வாடகைக்கு விடுவதில் உள்ள தற்போதைய எஸ்எல்ஏ வழிகாட்டுதல்கள், அணுகுமுறைகள் ஆகியவற்றிலிருந்து இரண்டு சொத்துகளையும் வாடகைக்கு விடும் நடைமுறையிலிருந்து மாறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அறிக்கையுடனும் பரிந்துரைகளுடனும் தான் ஒத்துப் போவதாக அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம் தெரிவித்ததுடன், கையிலிருந்த தகவல்களை வைத்துப் பார்க்கும்போது குற்றமேதும் இழைக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்பதால் இதற்கு மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இத்துடன் இந்த விவகாரம் குறித்த விசாரணை ஒரு முடிவுக்கு வருவதாகவும் கூறப்பட்டது.

இரண்டு அறிக்கைகளையும் பிரதமர் லீ ஏற்றுக்கொண்டதுடன், அறிக்கைகள் வெளியிடப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் இதர விவகாரங்களுக்கான பட்டியலில் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பான கேள்விகள் ஜூலை 3ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் கேட்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!