அனுஷா செல்வமணி
கொள்ளைநோய்ப் பரவலிலிருந்து வெற்றிகரமாக மீண்டு, கட்டுப்பாடுகள் முழுமையாகத் தளர்த்தப்பட்ட நிலையில் சிங்கப்பூரிலுள்ள முஸ்லிம்களும் தியாகத் திருநாளான ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டத்தில் திளைத்தனர்.
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்காக 194 ஆண்டுகால வரலாற்று சிறப்புமிக்க பென்கூலன் பள்ளிவாசலில் வியாழக்கிழமை ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 600 பேர் ஒன்றுகூடினர். அவர்கள் காலை 7 மணிக்கு முதலாவது தொழுகையிலும் 8.30 மணிக்கு இரண்டாவது தொழுகையிலும் கலந்துகொண்டனர்.
ஹஜ்ஜுப் பெருநாளை ஒட்டி பென்கூலன் பள்ளிவாசலுக்கு வருகைபுரிந்திருந்த ஆண்களும் பெண்களும் கொள்ளைநோய் அச்சுறுத்தலிலிருந்து விடைபெற்று நிம்மதியாக தொழுகை அமர்வில் பங்குகொண்டு, தோளோடுதோள் நின்று திருக்குர்ஆன் ஓதினர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வழக்கம்போல தொழுகையில் கலந்துகொண்டு தங்களின் உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் பள்ளிவாசலில் சந்தித்து சகோதரத்துவத்துடன் ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து பெருநாளைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
“கொவிட்-19 நோய் பரவலுக்குப் பிறகு இம்முறை அதிகமானோர் பள்ளிவாசலுக்கு வந்திருந்தனர். இதைப் பார்ப்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. முஸ்லிம்கள் ஒன்று கூடும் நாளாக மட்டுமின்றி தியாகங்களை நினைவுகூரும் நாளாகவும் இந்தப் பெருநாள் அமைகிறது.” என்று பென்கூலன் பள்ளிவாசலின் தலைவரான ஹாஜி முகம்மது ரபீக்கு, 58, பகிர்ந்துகொண்டார்.
தியாகத்தின் சின்னமாக ஹஜ்ஜுப் பெருநாளன்று குர்பான் சடங்கு நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக கொள்ளைநோய்க் காரணத்தினால் குர்பான் சடங்கு இடம்பெறாமல் இருந்தாலும், சில தவிர்க்க முடியாத காரணத்தால் இவ்வாண்டும் சிங்கப்பூரில் எந்தப் பள்ளிவாசலிலும் அந்தச் சடங்கு இடம்பெறவில்லை.
ஆயினும், பென்கூலன் பள்ளிவாசல் தனது பங்காக இந்தோனீசியாவில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஏழை எளியோருக்குக் கால்நடைகளை வழங்கியதாக ஹாஜி. முகம்மது ரபீக்கு கூறினார். மேலும், அடுத்த ஆண்டு முழுவீச்சாக குர்பான் சடங்கு எப்போதும்போல நடைபெறும் என்ற நம்பிக்கையுடனும் அவர் காத்திருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
13 ஆண்டுகளாக பென்கூலன் பள்ளிவாசலில் தொழுகை அமர்வுகளை முன்னின்று வழிநடத்திவரும் இமாம் கலீல் அகமது ஹசனி, 45, “நிச்சயமற்ற சூழலை நாம் கடந்து வந்துள்ளோம். காலை 6.30 மணிக்கே பல முஸ்லிம்கள் பள்ளிவாசலில் கூடத் தொடங்கிவிட்டனர். வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டோம் என்ற மகிழ்ச்சியுடன் நான் இவ்வாண்டு தொழுகை அமர்வை நிம்மதியாக வழிநடத்தினேன்.” என்றார்.
காலை ஆறு மணிக்கே தம் குடும்பத்தாருடன் பள்ளிவாசலுக்கு வந்துவிட்டார் கணக்காளர் அக்பர் அலி, 65. 20 ஆண்டுகளாக இந்தப் பள்ளிவாசலுக்கு வந்துபோகும் அவர், “பெரும்பாலும் தமிழ் முஸ்லிம்கள்தான் இந்தப் பள்ளிவாசலுக்கு வருவார்கள். இன்று நான் என் உறவினர்களையும், நண்பர்களையும் பார்த்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்.” என்று பகிர்ந்தார்.
வங்கியாளர் முகமது ஆசிஃப் மொஹினுதீன், 34, செங்காங் வட்டாரத்தில் வசித்தாலும் சிறுவயதிலிருந்தே ஒவ்வொரு பெருநாளன்றும் தவறாமல் பென்கூலன் பள்ளிவாசலுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
“இன்று நான் என் சகலையுடன் பள்ளிவாசலுக்கு வந்தேன். கொவிட்-19 தொற்றுப் பரவலின்போது நாங்கள் பெருநாளன்று வீட்டிலேயே தொழுகையில் ஈடுபட்டோம். இப்போது, பள்ளிவாசலில் மனநிறைவோடு தொழுகையில் ஈடுபட்டேன். என் குடும்பத்தினரை ஒரே நேரத்தில் சந்திக்கும் தளமாகவும் இந்தப் பள்ளிவாசல் திகழ்கிறது,” என்றார் திரு மொஹினுதீன்.


