சிங்கப்பூரில் மின்கழிவுகளைக் குறைக்கும் நோக்கில் ‘இன்ஜினியரிங் குட்’ எனும் சமூக சேவை நிறுவனமும் ‘கப்லான் சிங்கப்பூர்’ நிறுவனமும் திங்கட்கிழமை (ஜூன் 26) புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.
பயன்படுத்தப்பட்ட மின்சாதனங்களைச் சேகரித்து புதுப்பிக்க அது வகைசெய்யும். அந்த சாதனங்கள் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கும் உடற்குறையு உள்ளோருக்கும் இலவசமாக வழங்கப்படும். இதற்கான சேகரிப்புச் சாவடி கப்லான் நிறுவனத்தின் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின் மூலம் ஏறத்தாழ 220 கிலோ மதிப்புள்ள மின்சாதனங்கள் மீட்கப்படும். அவற்றில் மறுபயனீட்டிற்குத் தகுதிபெறும் சாதனங்கள் புதுப்பிக்கப்பட்டு பயன்படுத்தப்படும். மற்றவை மறுசுழற்சி முறைக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்ச்சியில் இன்ஜினியரிங் குட் நிறுவனம் 20,000 வெள்ளி மதிப்புள்ள காசோலையை கப்லான் சிங்கப்பூர் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்டது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர் மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, “சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மையுடைய வளர்ச்சிக்கு இதுபோன்ற முயற்சிகள் ஆக்ககரமான தாக்கத்தை உருவாக்கும்,“ என்று கூறினார். சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் 60,000 டன் மின்கழிவுகள் கொட்டப்படுவதை அவர் சுட்டினார்.
இதுகுறித்து கப்லான் சிங்கப்பூர் நிறுவனத் தலைவர் டாக்டர் சுசீ கூ, “நிறுவனங்களில் மின்கழிவுகளைக் குறைக்கும் பல்வேறு புதிய நீடித்தநிலைத்தன்மையை ஆதரிக்கும் திட்டங்களும் இவ்வொப்பந்தத்தின் மூலம் ஆராயப்படும். மேலும் இம்முயற்சியில் இளையர்களின் பங்களிப்பு வரவேற்கப்படுகிறது,” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ‘இன்ஜினியரிங் குட்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாட்ரிக் ஹீ, “மின்னிலக்க சேவை உறுதிப்பாடு, மின்கழிவைக் குறைத்தல் ஆகிய இரண்டு முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் நாங்கள் இணைந்து செயல்படவுள்ளோம்.
“கடந்த மூன்றாண்டுகளாக நன்கொடையாக பெறப்பட்ட மடிக்கணினிகளைப் புதுப்பித்து, குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு வழங்கி வருகிறோம். இதுவரை 8,000த்திற்கு மேற்பட்ட மடிக்கணினிகளை அவ்வாறு வழங்கியுள்ளோம்,“ என்று கூறினார்.


