சினோக்கோ மீன்பிடித் துறைமுகம் மூடப்படுகிறது

சினோக்கோ மீன்பிடித் துறைமுகம் மூடப்படுகிறது

2 mins read
07db9247-66cb-41eb-8a8a-f0433bc26756
சினோக்கோ மீன்பிடித் துறைமுகத்தில் தற்போது செயல்பட்டு வரும் மீன் வர்த்தகர்கள் அடுத்த ஆண்டிலிருந்து ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து செயல்படுவர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சினோக்கோ மீன்பிடித் துறைமுகம் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் மூடப்படுகிறது. அங்கு தற்போது செயல்பட்டு வரும் வர்த்தகர்கள் ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்துக்கு இடம் மாற இருக்கின்றனர்.

சிங்கப்பூரில் தற்போது இவ்விரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் மட்டுமே உள்ளன.

ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்தில் புதிய வசதிகள் கட்டப்படுகின்றன. அவற்றுக்கான கட்டுமானப் பணிகள் இவ்வாண்டு துவக்கத்தில் தொடங்கின.

தற்போது அங்கு 110 வர்த்தகத் தளங்களுடனான மொத்த வியாபாரச் சந்தைக் கட்டடம் உள்ளது. அதற்கு அருகில் இன்னொரு கட்டடம் கட்டப்படுகிறது. அதில் கூடுதலாக 20 வர்த்தகத் தளங்கள் அமைக்கப்படும்.

இந்தப் புதிய வர்த்தகத் தளங்கள் சினோக்கோவிலிருந்து அங்கு செல்லும் வர்த்தகர்களுக்காகக் கட்டப்படுவதாக சிங்கப்பூர் உணவு ஆணையம் கூறியது. இரு மீன்பிடித் துறைமுகங்களையும் அது இயக்குகிறது.

அடுத்த ஆண்டு மூடப்படும் சினோக்கோ மீன்பிடித் துறைமுகத்தில் தற்போது ஏறத்தாழ 25 வர்த்தகர்கள் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது 1997ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. உள்ளூர் மீன்பிடி படகுகளுக்கான தளமாக இது பயன்படுத்தப்பட்டது.

ஆனால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரின் கடைசி சில மீன்பிடிப் படகுகளை மொத்த வியாபாரியான லியான் யாக் மீன் வர்த்தக நிறுவனம் விற்றது.

லியான் யாக் மீன் வர்த்தக நிறுவனம் 1955ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1997ஆம் ஆண்டில் அது சினோக்கோவுக்கு இடம் மாறியபோது அதனிடம் 10க்கும் மேற்பட்ட படகுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த ஆண்டில்தான் பொங்கோல் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்களும் வியாபாரிகளும் சினோக்கோவுக்கு இடம் மாறினர். பொங்கோலில் குடியிருப்புக் கட்டடங்கள் கட்டப்பட இருந்ததால் அவர்கள் சினோக்கோவுக்கு இடம் மாறினர்.

1997ஆம் ஆண்டில் 100லிருந்து 200 மீன்பிடிப் படகுகள் இருந்ததாகவும் மீன்பிடித்த பிறகு சினோக்கோவில் உள்ள 180 மீட்டர் நீளமுள்ள படகுத் துறையில் அவற்றைக் கொண்டு வந்து மீனவர்கள் இறக்குவர் என்றும் பொங்கோல் மீன் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவரான 43 வயது திரு டேனியல் பே கூறினார்.

இதற்கிடையே, ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்திற்கு இடம் மாறிய பிறகு ஏற்கெனவே பல ஆண்டுகளாக அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டு வருவோருடன் போட்டி இருக்கும் என்றும் இதனால் தங்களுடைய வருமானம் பாதிக்கப்படுமா என்பதைக் கண்டறிய பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் சினோக்கோ வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

மூடப்படும் சினோக்கோ மீன்பிடித் துறைமுகம் வருங்காலத்தில் எதற்காகப் பயன்படுத்தப்படும் என்று இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்