சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டு நிறுவனமான தெமாசெக், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் (எஸ்ஐஏ) தான் வைத்துள்ள பாத்தியதையில் 1.85 விழுக்காட்டு பங்குகளை விற்கப்போவதாக தகவல் வெளியானதை அடுத்து எஸ்ஐஏ நிறுவனத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை 4.8% விலை சரிந்தன.
எஸ்ஐஏ நிறுவனத்தில் ஆக அதிகமாக முதலீடு செய்து இருக்கும் தெமாசெக், கிட்டத்தட்ட $400 மில்லியன் மதிப்புள்ள பங்குகளை, அதாவது 1.85 விழுக்காட்டு பங்குகளை விற்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் புதன்கிழமை தகவல் வெளியிட்டு இருந்தது.
சிங்கப்பூர் பங்குச்சந்தையில் புதன்கிழமை எஸ்ஐஏ பங்கு விலை $7.50ஆக வர்த்தகம் நடந்தது.
எஸ்ஐஏவில் உள்ள தன்னுடைய முதலீடுகளில் 1.85% பங்குகளை விற்ற பிறகும் அந்த நிறுவனத்தில் மிக அதிகத் தொகையை முதலீடு செய்து இருக்கும் அமைப்பாக தெமாசெக் தொடரும்.
அது 53.5% பாத்தியதையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் என்று ராய்ட்டர்ஸ் நிறுவன கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.
எஸ்ஐஏ பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகம் தொடங்கிய பிறகு பிற்பகல் 1.02 மணியளவில் 36 காசு அல்லது 4.8% குறைந்து $7.14ஆக விற்கப்பட்டது.
மொத்தம் 73.9 மில்லியன் பங்குகள் கைமாறின. எஸ்ஐஏ பங்குகளில்தான் ஆக அதிக வர்த்தகம் நடந்தது.
இது பற்றி ராய்ட்டர்ஸ் நிறுவனம் கேட்டபோது விளக்கம் அளித்த தெமாசெக் நிறுவனத்தின் போக்குவரத்து, தளவாடப் போக்குவரத்துத் துறை தலைவரான திருவாட்டி ஜுலியட் டியோ, பெரிய முதலீட்டாளர் என்ற முறையில் தெமாசெக் நிறுவனம் தன்னுடைய முதலீடுகளை நீண்டகாலப் போக்கில் நிலையான வருவாயை ஈட்டித் தரும் அளவில் மாற்றியமைப்பது வழக்கமான ஒன்றுதான் என்று தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
எஸ்ஐஏ நிறுவனத்தின் நீண்டகால வெற்றியில் தாங்கள் கடப்பாடு கொண்டிருப்பதாகவும் அந்த நிறுவனத்தில் பெரும்பான்மை பாத்தியதையைத் தொடர்ந்து தெமாசெக் நிலைநாட்டி வரும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

