ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களுக்கு மின்சாரக் கட்டணம் உயர்கிறது. சிங்கப்பூர்வாசிகள் முந்திய காலாண்டைக் காட்டிலும் சராசரியாக 1.2% அதிகக் கட்டணம் செலுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளைப் பொறுத்தவரையில், மின்சாரக் கட்டணம் ஜிஎஸ்டி வரி சேர்க்கப்படாமல், ஒரு கிலோவாட்மணி மின்சாரக் கட்டணம் 27.43 காசிலிருந்து 27.74 காசாக உயர்த்தப்படும் என்று எஸ்பி குழுமம் வெள்ளிக்கிழமை கூறியது.
கடந்த ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து ஜிஎஸ்டி எட்டு விழுக்காட்டுக்கு உயர்ந்திருப்பதால், ஏப்ரல் முதல் ஜூன் வரை இருந்த மின்சாரக் கட்டணமான 29.62 காசிலிருந்து 29.96 காசுக்கு உயரும்.
அப்படி என்றால், வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) நான்கறை வீட்டில் வசிக்கும் குடும்பங்கள் ஜிஎஸ்டி சேர்க்கப்படாமல் சராசரியாக 1.14 வெள்ளி கூடுதலாகச் செலுத்தும்.
இப்போது வீவக நான்கறை வீட்டில் வசிக்கும் குடும்பங்கள் சராசரியாக 366.84 கிலோவாட்மணி மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. அதற்கு, அவை ஜிஎஸ்டி சேர்க்கப்படாமல் $100.62 கட்டணம் செலுத்துகின்றன. அக்கட்டணம் ஜூலை மாதத்திலிருந்து $101.76 ஆக உயரும்.
2022 அக்டோபர் முதல் தொடர்ந்து மூன்று காலாண்டுகள் சரிவைச் சந்தித்த மின்சாரக் கட்டணம் இந்தக் காலாண்டில் உயர்வைச் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எரிசக்திச் செலவுகள் உயர்ந்திருப்பதால்தான் மின்சாரக் கட்டணமும் உயர்ந்துள்ளது என்று விளக்கிய எஸ்பி குழுமம், எரிசக்திச் செலவுகள் கிலோவாட்மணிக்கு 0.31 காசு உயர்ந்துள்ளது என்றாலும் இதர செலவுகளில் மாற்றமில்லை என்றும் கூறியது.
எரிசக்தி உற்பத்தி நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளும் இந்தச் செலவுகள், எரிபொருள், எரிசக்தி உற்பத்தி ஆகியவற்றின் செலவுகளுக்கேற்ப காலாண்டு அடிப்படையில் மாற்றியமைக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மின்கட்டணத்தில் 75.7 விழுக்காடு எரிசக்திச் செலவுகளுக்கானது என்றும் எஞ்சியவை கட்டணம் மின்விநியோகத்திற்கும் நடைமுறைச் செலவுகளுக்கும் பயன்படுத்தப்படும் என்றும் குழுமம் விளக்கியது.
இதற்கிடையே, குழாய்வழி எரிவாயு விநியோகத்துக்குப் பொறுப்பு வகிக்கும் சிட்டி எனர்ஜி நிறுவனம் வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கையில், வீடுகளுக்கான எரிவாயுக் கட்டணம் ஜிஎஸ்டி சேர்க்கப்படாமல் கிலோவாட்மணிக்கு 0.23 காசு உயரும் என்று தெரிவித்துள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் வரை எரிவாயுக் கட்டணம் கிலோவாட்மணிக்கு 21.68 காசிலிருந்து 21.91 காசாக உயரும். ஜிஎஸ்டி சேர்க்கப்பட்ட பிறகு, திருத்தப்பட்ட எரிவாயுக் கட்டணம் கிலோவாட்மணிக்கு 23.66 காசாக இருக்கும்.
முந்திய காலாண்டைக் காட்டிலும் இப்போது எரிபொருள் செலவுகள் அதிகரித்திருப்பதால், எரிவாயுக் கட்டணத்திலும் உயர்வு ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.

