கரையோர காவற்படையின் பயிற்றுவிப்பாளர் ஒருவரின் மரணத்துக்கு பல்வேறு பாதுகாப்புக் குறைபாடுகளே காரணம் என்று மரண விசாரணை அதிகாரி கிறிஸ்தஃபர் கோ ஜூன் 21ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தீர்ப்பளித்திருக்கிறார்.
கடலுக்குள் விழுந்த அந்த ஆடவர் பாதுகாப்புப் படகின் உந்துவிசை சக்கரத்தில் சிக்கிக் கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
2022, ஜூலை 20ஆம் தேதி பிராணி தளத்தில் உள்ள கரையோர காவற்படை தலைமையகத்தில் நடைபெற்ற முக்குளிப்புப் பயிற்சிக்கு திரு ஓங் சியாங் தாய் பயிற்சி நடத்துநராகச் செயல்பட்டார்.
அந்த 56 வயது பயிற்றுவிப்பாளர் பாதுகாப்புப் படகில் முக்குளிப்புச் சாதனங்களை ஏற்றிக்கொண்டிருந்த சமயத்தில் இவ்விபத்து நிகழ்ந்தது. அதற்கு அருகில் பயிற்சியாளர் தங்கள் முக்குளிப்புச் சாதனங்களைச் சரிபார்த்துக்கொண்டிருந்தனர்.
திரு ஓங், அரை குந்து நிலையில் பாதுகாப்புப் படகின் இயந்திரத்தை இயங்க வைக்க முயன்றுகொண்டிருந்ததை அவரது சகாவான திரு மெல்வின் டான் பார்த்தார்.
பொதுவாக, அமரும் நிலையைக் காட்டிலும் அரை குந்து நிலையில் ஒருவரது சமநிலை வலுவாக இருக்காது என்பதை சுட்டிய மரண விசாரணை அதிகாரி, இயந்திரத்தை இயங்க வைக்க ஒருவர் எடுக்கும் அமர்வுநிலை அவரைப் பொறுத்தே அமைந்திருக்கும் என்றார்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்க்கும்போது, படகின் இயந்திரத்தின் அதிகப்படியான அசைவு, படகையும் உலுக்கியதால், திரு ஓங் நிலை தடுமாறியிருக்கலாம் என்றார் திரு டான். காட்சியில் திரு ஓங், பின்புறமாக நீருக்குள் விழுவதைப் பார்க்க முடிந்தது.
அந்தக் காட்சியில், அந்தப் படகு மிதக்கும் மேடையில் அடித்து, மீண்டும் திரு ஓங்கை நோக்கி வந்தது. அவரோ, எதிரே வரும் படகை நோக்கி நீந்திச் சென்றார். ஆனால், படகு அவருக்கு மேலே சென்றது தெரிந்தது.
தொடர்புடைய செய்திகள்
படகு இயந்திரத்தின் பலத்த சத்தத்தையும் திரு டானின் உதவிக் குரலையும் கேட்ட பயிற்சியாளர்கள் ஓடி வந்தபோது, திரு ஓங்கின் உடல் படகுக்கு அருகில் மிதந்துகொண்டிருந்தைப் பார்த்து அதிர்ச்சியுற்றனர்.
நீருக்குள் குதித்த அதிகாரிகள் சிலர் திரு ஓங்கின் உடல் உந்துவிசை சக்கரத்தில் சிக்கிக் கொண்டதைப் பார்த்து, ஓங்கின் உடையில் இருந்த கத்தியைப் பயன்படுத்தி அவரை சக்கரத்திலிருந்து விடுவித்தனர்.
இன்னும் மூச்சு விட்டுக்கொண்டிருந்த திரு ஓங்கின் உடலில் பல்வேறு காயங்கள் இருந்தன. அதே தளத்தில் மற்றொரு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மருத்துவ உதவியாளர் ஒருவர், அவருக்கு உதவினார்.
முற்பகல் 11.30 மணிக்கு அங்கு வந்து சேர்ந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர், முற்பகல் 11.45 மணிக்கு அவரது மரணத்தை உறுதிப்படுத்தினர்.
அடுத்த நாள் நடைபெற்ற பிரேத பரிசோதனையில், இதயத்திலிருந்து ரத்தக் கசிவு, முகத்தில் ஏற்பட்ட கடுமையான காயங்கள், நீரில் முழ்கியது ஆகியவை திரு ஓங்கின் மரணத்தின் காரணிகள் என்று அறிவிக்கப்பட்டது.
திரு ஓங், மிகத் திறமையான முக்குளிப்பாளர் என்றும் அவர் முன்பு சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் முக்குளிப்புப் பிரிவில் வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்தவர் என்றும் மரண விசாரணை அதிகாரி திரு கோ தெரிவித்தார்.
திரு ஓங்கின் மரணத்தில் சூது இல்லை என்று கூறிய திரு கோ, காவல்துறையும் மனிதவள அமைச்சும் நடத்திய தீவிர புலனாய்வில் அவரது மரணத்துக்கு பல்வேறு பாதுகாப்புக் குறைபாடுகளே காரணம் என்று தெரிவித்தார்.
மேலும் திரு ஓங், சம்பவம் நடந்தபோது உயர்காப்பு உடை அணியாதிருந்ததும் சுட்டிக் காட்டப்பட்டது.
இந்த மரணத்தை துரதிர்ஷ்டவசமான அசாம்பாவிதம் என்று மரண விசாரணை அதிகாரி திரு கோ தீர்ப்பளித்தார்.

