போதைப் பொருள் காட்சிப்படுத்துதலில் தவறு நேர்ந்திருக்கலாம் என்ற ஆடவரின் கோரிக்கை மனு நிராகரிப்பு

போதைப் பொருள் காட்சிப்படுத்துதலில் தவறு நேர்ந்திருக்கலாம் என்ற ஆடவரின் கோரிக்கை மனு நிராகரிப்பு

3 mins read
af3cbd31-56de-4955-a35a-b92edbb50ab6
தனது வழக்கறிஞர்கள் மூலம், விசாரணையின்போது சிஎன்பி அதிகாரிகள் கைப்பற்றிய போதைப் பொருள் காட்சிப்படுத்தப்பட்டபோது சில தவறுகள் நேர்ந்திருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டவர் தெரிவித்தார்.   - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

போதைப் பொருள் கடத்தலுக்காக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 29 வயது ஆடவர், மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) தலைமையகத்தில் போதைப் பொருள் காட்சிப்படுத்துதலின்போது சில தவறுகள் நேர்ந்திருக்கலாம் என்று கோரிக்கை மனு ஒன்றைத் தனது வழக்கறிஞர்கள் மூலம் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

ஆனால் அதை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

தனக்காக வாதாடும் காளிதாஸ் சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் மூலம், குற்றம் சாட்டப்பட்ட மலேசியரான யோகேஸ்வரன் சி. மனோகரன், தனது விசாரணையின்போது சிஎன்பி அதிகாரிகள் கைப்பற்றிய போதைப் பொருள் காட்சிப்படுத்தப்பட்டபோது சில தவறுகள் நேர்ந்திருக்கலாம் என்றார்.

போதைப் பொருள்களின் எடை குறித்து சிஎன்பியும் சுகாதார அறிவியல் ஆணையமும் (எச்எஸ்ஏ) வெவ்வேறு தகவல்களைக் கொண்டிருந்தன என்றும் தன்னுடன் குற்றம் சாட்டப்பட்ட 75 வயது டியோ இயு கின் டீ புகைப்படம் எடுக்கும் நடவடிக்கையில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்றும் வாதிட்டார்.

இருவரும், 2020 ஜனவரி மாதம் 14ஆம் தேதி கேலாங் பாரு பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

டியோ வைத்திருந்த நீல நிறப் பையில் இருந்த இரு பொட்டலங்களில் 837 கிராம் மாவுப் பொருள் இருந்தது. பின்னர் எச்எஸ்ஏ மேற்கொண்ட பகுப்பாய்வில் அந்த மாவுப் பொருளில் 24.81 கிராம் ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

15 கிராமுக்கு மேல் ஹெராயின் வைத்திருக்கும் ஒருவருக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம்.

கேலாங் பாரு, புளோக் 57க்கு முன்புறம் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த யோகேஸ்வரனின் மனைவி ஹேமாவும் கைது செய்யப்பட்டார்.

ஜூன் 19ஆம் தேதி வெளியிடப்பட்ட தமது தீர்ப்பில் நீதிபதி ஃபிலிப் ஜெயரத்னம், “சிஎன்பி தலைமையகத்தில் நடைபெற்ற போதைப் பொருள் காட்சிப்படுத்தலின்போது குற்றம் சாட்டப்பட்ட மூவரும் இருந்தனர். அவர்கள் அங்கு நடைபெற்றதைப் பார்வையிட்டனர்.

“போதைப் பொருள் பொட்டலங்களை அதிகாரிகள் வெட்டுதல், எடை போடுதல் போன்ற செயல்களை டியோ, யோகேஸ்வரன், ஹேமா ஆகிய மூவரும் பார்த்தனர்,” என்றார்.

“இந்த நடைமுறையில் தவறுகள் நேர்ந்திருக்கலாம் என்று யோகேஸ்வரன் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு நடைமுறையையும் குற்றம் சாட்டப்பட்டவர் பார்க்கவில்லை என்பதால், அந்த நடைமுறைச் சங்கிலித் தொடரில் தவறு நேர்ந்திருக்கலாம் என்று சொல்ல முடியாது.

“மேலும் காட்சிப்படுத்தப்பட்ட போதைப் பொருள் மிகுந்த பாதுகாப்புடன் ஏஎஸ்பி யாங்கின் கண்காணிப்பில் வைக்கப்பட்டன. புகைப்படம் எடுக்கும் நிகழ்வுக்குப் பிறகு அவை மீண்டும் பாதுகாப்பான பைகளில் வைக்கப்பட்டன,” என்றும் நீதிபதி விவரித்தார்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் எடை குறித்து ஏஎஸ்பி யாங்கும் எச்எஸ்ஏயின் டாக்டர் ஓங் மெய் சிங்கும் வெவ்வேறு தகவல்களைக் கொண்டிருந்தாலும், டாக்டர் ஓங்கின் விளக்கத்தின்படி, வெவ்வேறு எடை சாதனத்தில் வைக்கப்படும் பொருளின் எடையில் மிகச் சிறிய வித்தியாசம் ஏற்படுவது சாத்தியமே என்றார் நீதிபதி ஃபிலிப்.

பொட்டலங்களில் இருந்த வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளும் அல்லது போதைப் பொருளும் சிறிய தண்டனையையே பெற்றுத்தரும் என்று தான் எண்ணியதாகக் கூறியதையும் நீதிபதி நிராகரித்தார்.

டியோ சார்பில் வாதிட்ட அவரது வழக்கறிஞர்கள் டியோ வசம் இருந்த போதைப் பொருள் அவரது சொந்த பயன்பாட்டுக்காக என்றனர். தனது குடும்பத்தைக் காப்பாற்ற தான் போதைப் பொருள் விற்றதாக டியோ முன்னதாகக் கூறியதைச் சுட்டி அதையும் நிராகரித்தார்.

இரு ஆடவர்களின் தண்டனை விதிப்பு பின்னொரு தேதியில் இடம்பெறும். ஹேமாவின் குற்றச்சாட்டு பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்