சிங்கப்பூரில் அந்திமக்கால சிகிச்சைக்கான மானியம் அதிகரிக்கும். நோயாளிகள் மெடிஷீல்டு ஃலைப் திட்டத்தின்கீழ் பெறக்கூடிய பணத்திற்கான வரம்பும் அடுத்த ஆண்டு முதல் பாதியில் சரிசெய்யப்படும்.
அத்தகைய சேவைகளைப் பெறுவதும் அவற்றுக்கான செலவு கட்டுப்படியாகக் கூடியதாக இருப்பதும் இதன் மூலம் உறுதிப்படுத்தப்படும்.
வீட்டில் இருந்தபடி அந்திமக்கால சிகிச்சை பெறுவதற்கும் சொந்தமாக மெடிசேவ் தொகையைப் பயன்படுத்தும் பகல்நேர விடுதி நோயாளிகளுக்கும் உரிய மெடிசேவ் ஆயுள்கால பணமெடுப்பு வரம்பும் அகலும்.
அந்திமக்கால பராமரிப்புக்கான தேசிய உத்தி 2023ன் பரிந்துரைகள் தொடர்பில் இவை இடம்பெறுகின்றன.
அந்த உத்தி சனிக்கிழமை தொடங்கியது. வீட்டில் மரணமடைய விரும்புகின்ற மேலும் பல நோயாளிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அந்திமக்கால சிகிச்சை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளவும் அந்தப் பரிந்துரைகள் அனுமதிக்கும்.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங், சனிக்கிழமை 8வது சிங்கப்பூர் அந்திமக்கால பராமரிப்பு மாநாட்டில் உரையாற்றினார்.
இந்தச் சிகிச்சைக்கான நிதி ஆதரவை கணிசமான அளவுக்குத் தனது அமைச்சு அதிகப்படுத்தும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதையடுத்து ஏறக்குறைய அனைத்து அந்திமக்கால நோயாளிகளுக்கும் கிடைக்கக்கூடிய மானியம் 55% அளவுக்கு அதிகரிக்கும் என்பதை திரு ஓங் சுட்டிக்காட்டினார்.
மெடிஷீல்டு ஃலைப் திட்டத்தின்கீழ் பெறக்கூடிய பணத்திற்கான நாள் ஒன்றுக்கான வரம்பு இப்போது பொது, சிறப்பு அந்தமக்கால நோயாளிகளுக்கு முறையே $250 ஆகவும் $350 ஆகவும் இருக்கிறது. இது முறையே நாள் ஒன்றுக்கு $460 ஆகவும் $500 ஆகவும் கூடும்.
நோயாளிகளில் பத்து பேரில் ஒன்பது பேருக்கு இந்த மானியமே முற்றிலும் போதுமானது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேபோல் $2500 என்ற ஆயுள்கால மெடிசேவ் வரம்பு நோயாளிகளின் உடல் நலன் எப்படி இருந்தாலும் அதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் அகற்றப்படும்.
இருந்தாலும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் மெடிசேவ் கணக்கைப் பயன்படுத்தும் நோயாளிகளைப் பொறுத்தவரை இந்த வரம்பு தொடர்ந்து நடப்பில் இருந்துவரும்.
இந்த மாற்றங்கள், மருத்துவமனை பராமரிப்பு ஏற்பாட்டில் இருந்து அந்தமக்கால பராமரிப்பு ஏற்பாட்டுக்குச் சரளமாக உருமாற உதவும் என்று அமைச்சர் கூறினார்.
குடும்ப வருவாய் எப்படி இருந்தாலும் சுகாதார அமைச்சு நிதி உதவி பெறும் பராமரிப்பு நிறுவனங்கள் வழங்கும் அந்திமக்கால சிகிச்சையைப் பெறும் அனைத்து நோயாளிகளுக்கும் 2024 நான்காவது காலாண்டில் இருந்து மருந்து மானியம் கிடைக்கும் என்றும் அமைச்சர் உறுதி தெரிவித்தார்.
சிங்கப்பூர் குடிமக்களுக்கு இந்த மானியம் குறைந்தபட்சம் 50% ஆக இருக்கும். நிரந்தரவாசிகளுக்கு குறைந்தபட்சம் 25% மானியம் கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
மானிய அதிகரிப்பு மாற்றங்கள் எல்லாம் அடுத்த ஆண்டு முதல் பாதியில் இருந்து கட்டம்கட்டமாக நடப்புக்கு வரும்.
அந்திமக்கால சிகிச்சை வழங்கும் நிறுவனங்கள் ஆண்டு ஒன்றுக்குச் சுமார் $15 மில்லியன் அதிக ஆதரவைப் பெறும்.