2022ல் 476 உயிர்மாய்ப்புகள்; 2021ஆம் ஆண்டைவிட அதிகம்

2022ல் 476 உயிர்மாய்ப்புகள்; 2021ஆம் ஆண்டைவிட அதிகம்

2 mins read
8d2c0749-0cc7-43ce-a62d-ba334d209cfc
எல்லா வயதுப் பிரிவினரிடத்திலும் உயிர்மாய்ப்புகள் அதிகமாகி உள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்

சிங்கப்பூரில் சென்ற ஆண்டில் 476 பேர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து பார்க்கையில் இந்த எண்ணிக்கைதான் ஆக அதிகமாக இருக்கிறது.

சிங்கப்பூர் இரட்சண்ய சேனை (எஸ்ஓஎஸ்) என்ற லாபநோக்கற்ற உயிர்மாய்ப்புத் தடுப்பு மையம் சனிக்கிழமை இந்த விவரங்களை அறிக்கையில் தெரிவித்தது.

கடந்த 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டின் எண்ணிக்கை 25.9% அதிகம் என்பதை அறிக்கை சுட்டியது. 2021ஆம் ஆண்டில் 378 உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

எல்லா வயதுப் பிரிவினரிடத்திலும் அதிக உயிர்மாய்ப்புகள் பதிவாகி உள்ளன.

குறிப்பாக முதியோரிடையே இது அதிகம். 70வயது முதல் 79 வயது வரைப்பட்ட முதியோரிடையே உயிர்மாய்ப்புகள் 30% லிருந்து 48% ஆகக் கூடின. இது, 2021ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்கையில் 60% அதிகம்.

எஸ்ஓஎஸ் மையத்தின் சேவைகளைப் பயன்படுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 27% கூடி இருக்கிறது. 24 மணிநேர நேரடித் தொலைபேசி, கேர்டெக்ஸ்ட் என்ற வாட்ஸ்அப் சேவை ஆகியவை எஸ்ஓஎஸ் மையத்தின் சேவைகளில் அடங்கும்.

கேர்டெக்ஸ்ட் சேவை சென்ற ஆண்டில் 11,107 முறை பயன்படுத்தப்பட்டது. அதே ஆண்டில் உதவி கேட்டு வந்த அழைப்புகள் இரண்டு மடங்காகி 27,341 ஆகக் கூடின.

இந்த எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில் 11,591 ஆக இருந்தது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இதனிடையே, இதுபற்றி கருத்து கூறிய ‘கனெக்‌ஷன்ஸ் மைண்ட்ஹெல்த்’ என்ற அமைப்பின் மூத்த ஆலோசகரும் மருத்துவத் துறை இயக்குநருமான டாக்டர் ஜார்ட் இங், சமூகத்தில் குறிப்பாக இளையர், முதியோரிடையே காணப்படும் வெளியே தெரியாத மன உளைச்சல்களை உயிர்மாய்ப்பு மரணங்கள் பிரதிபலிக்கின்றன என்றார்.

மனநலனைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து நாம் விழிப்புடன் இருந்துவர வேண்டும் என்று அவர் கூறினார்.

பிரச்சினைகளை முன்னதாகவே கண்டறியவும் உதவி நாடும் கலாசாரத்திற்கு ஊக்கமூட்டவும் ஒருவர் மற்றொருவரைக் கண்காணிக்கவும் உதவும் முயற்சிகள் இரண்டு மடங்காக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மனநலக் கழகத்தைச் சேர்ந்த மூத்த ஆலோசகர் டாக்டர் ஓங் சே ஹோவ், பெற்றோர், கல்வித் துறையினர், சுகாதாரப் பராமரிப்புத் துறையினர், சமூக ஊழியர்கள் அனைவரும் ஒத்துழைத்து பாதுகாப்புக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, உயிர்மாய்ப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
உயிரிழப்பு