$150,000 மதிப்புள்ள ‘கோடின்’ பிடிபட்டது; அறுவரிடம் விசாரணை

$150,000 மதிப்புள்ள ‘கோடின்’ பிடிபட்டது; அறுவரிடம் விசாரணை

2 mins read
4a5e2717-82af-4b80-a7c5-c519813bfcd6
சுவா சூ காங்கில் உள்ள குடியிருப்பு ஒன்றில் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத இருமல் மருந்து கொள்கலன்கள். - சுகாதார அறிவியல் ஆணையம்
multi-img1 of 2
Google News Preferred Icon

பல அமைப்புகள் ஜூன் மாதம் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையில் $150,000 மதிப்புள்ள ஏறக்குறைய 190 லிட்டர் கோடின் இருமல் மருந்தும் $680,000க்கும் அதிகமான ரொக்கமும் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட இருமல் மருந்தின் அளவு, அந்த போதைக்கு அடிமையான 1,000 பேருக்கு போதுமானது.

சட்டவிரோத கோடின் மருந்து விநியோகக் கும்பலைக் குறிவைத்து 2019க்குப் பிறகு நடத்தப்பட்ட மிகப்பெரிய கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட சுகாதார அறிவியல் ஆணையம் (எச்எஸ்ஏ) பிடோக் காவல் துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், 34 மின் சிகரெட்டுகள், எட்டு பாக்கெட்டு வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள், மாத்திரைகள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

இருமல் மருந்து போன்ற பதிவு செய்யப்படாத சுகாதாரப் பொருள்களை விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் குழுமம் பீஷானிலுள்ள உரிமம் பெற்ற மருந்தகம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளை நடத்தியுள்ளது.

ஜூன் 14 முதல் 16 வரை நடைபெற்ற அமலாக்க நடவடிக்கையில் 37 வயதுக்கும் 61 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு ஆண்கள் விசாரிக்கப்படுகின்றனர்.

சுகாதாரப் பொருள்கள் சட்டம், சுங்கச் சட்டம், புகையிலை சட்டம் ஆகியவற்றின் கீழ் வரும் குற்றங்களுக்காக அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

அறுவரில் நால்வர் சங்கங்கள் சட்டத்தின் ழ் சட்டவிரோத குண்டர் கும்பலை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகிக்கத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, ஊழல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற கடுமையான குற்றச் சட்டத்தின்கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

பீஷான் மருந்தகத்தில் கைப்பற்றப்பட்ட கோடின், கேலாங்கில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக சுவா சூ காங் அவென்யூ 3ல் உள்ள குடியிருப்பில் தயாரிக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுகாதார அமைச்சு பீஷான் மருந்தகத்தில் விசாரணை நடத்தி வருகிறது. தனியார் மருத்துவமனைகள், மருத்துவ நிலையங்கள் சட்டத்தின் விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்முறை விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், அந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க சிங்கப்பூர் மருத்துவ மன்றத்திற்கு பரிந்துரைக்கப்படும்.

சட்டவிரோதமான முறையில் சுகாதாரப் பொருள்களை இறக்குமதி செய்தல், தயாரித்தல் அல்லது விநியோகித்தல் அல்லது இவற்றை இணைத்து செய்தல் ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஈராண்டுகள் வரை சிறை அல்லது $50,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சட்டவிரோத இருமல் மருந்து தொடர்பான நடவடிக்கைகளை அறிந்தால் பொதுமக்கள் 6866-3485 என்ற எண்ணில் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் தெரிவிக்கலாம் அல்லது hsa_is@hsa.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்