தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறந்த கப்பல் பிரிவுக்கான விருதை வென்றுள்ளது ‘ஆர்எஸ்எஸ் வேலியன்ட்’

2 mins read
926dcd6f-8a59-4f14-a69d-0a1c9067816e
ஆர்எஸ்எஸ் வேலியன்ட் கப்பலின் ஆயுதப் படைத் தலைவர், மூன்றாம் தரநிலை ராணுவ நிபுணர் (எம்இ3) முருகேஷ் வெள்ளைச்சாமி. - படம்: சிங்கப்பூர் ஆயுதப் படை

சிங்கப்பூர் ஆயுதப் படையின் சிறந்த பிரிவுகளுக்கான போட்டியில், சிறந்த கப்பல் பிரிவு விருதை வென்றுள்ளது ‘ஆர்எஸ்எஸ் வேலியன்ட்’.

முன்னதாக ‘சிறந்த கப்பல் விருது’ என்று அழைக்கப்பட்ட போட்டிப் பிரிவில் இக்கப்பல் 1993, 1998, 2012ஆம் ஆண்டுகளில் வென்றது. 2015ஆம் ஆண்டில் விருதின் பெயர் ‘சிறந்த கப்பல் பிரிவு’ என்று பெயர் மாற்றம் கண்ட பிறகு, முதல்முறையாக இவ்விருதை அது வென்றுள்ளது.

ஆண்டுதோறும் சிங்கப்பூர் கடற்படையின் கப்பல்கள் பங்கேற்கும் வெவ்வேறு பயிற்சிகள், போட்டிகள் போன்ற அம்சங்களின் அடிப்படையில் இவ்விருது வழங்கப்படுகிறது. 

கடந்த ஆண்டு தாய்லாந்து கடற்படையுடன் ‘சிங்சியாம்’ என்ற பயிற்சியிலும், மலேசியக் கடற்படையுடன் ‘மலாபுரா’ என்ற பயிற்சியிலும் ‘ஆர்எஸ்எஸ் வேலியன்ட்’ வெற்றிகரமாக ஈடுபட்டது.

இப்பயிற்சிகளில் போர்க்கலை, ஆயுதம் ஏந்திச் சுடுதல் ஆகிய பிரிவுகளில் இக்கப்பல் பிரிவு சிறந்து விளங்கியதென இப்பிரிவின் ஆணை அதிகாரி, மேஜர் சொய் செங் டக் கூறினார். 

மேலும், சிங்கப்பூர் கடற்படை இவ்வாண்டு முதல்முறையாக நடத்திய போர்க்கலை போட்டியிலும் இக்கப்பல் பிரிவு வெற்றிபெற்றது, சிறந்த கப்பல் பிரிவுக்கான விருதை வென்றதில் முக்கியப் பங்கு வகித்திருக்குமென அவர் கருதுகிறார்.  

இக்கப்பலின் ஆயுதப் படைத் தலைவர், மூன்றாம் தரநிலை ராணுவ நிபுணர் முருகேஷ் வெள்ளைச்சாமி, தம் கப்பல் இவ்விருதைப் பெற்றதில் மிக்க மகிழ்ச்சியென்றும் தொடர்ந்து தமது கப்பல் பிரிவின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தைத் தமக்குள் அது ஏற்படுத்தியுள்ளதாகவும் பகிர்ந்துகொண்டார். 

ஆண்டுதோறும் நடைபெற்ற அனைத்து பயிற்சிகளிலும் தொடர்ந்து விடாமுயற்சியையும் உழைப்பையும் செலுத்தியதற்குத் தகுந்த பலன் கிடைத்துள்ளதாக அவர் உணர்கிறார்.

“கடல்சார் பயிற்சிகளுக்குச் செல்லும்போது குடும்பத்தைப் பிரிந்து நெடுங்காலம் இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். இருப்பினும், கப்பலில் ஒவ்வொரு வீரருடனும் நாம் கொண்டிருக்கும் சகோதரத்துவம், மனவலியைக் குறைக்கும். அத்தகைய தியாகங்களை அங்கீகரிக்கும் வண்ணம் இவ்விருது கிடைத்திருப்பது மனதை நெகிழ வைத்துள்ளது,” என்று திரு முருகேஷ் கூறினார்.     

குறிப்புச் சொற்கள்