சிங்கப்பூரில் பெரிய பேரங்காடிக் கடைகளில் திங்கள்கிழமை முதல் பிளாஸ்டிக் பைக்குக் கட்டாய விலை ஏற்பாடு நடப்புக்கு வருகிறது.
இதனால் கடைகளில் தாங்கள் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பைக்கும் பயனீட்டாளர்கள் ஐந்து காசு கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும்.
இந்த ஏற்பாட்டில் ஃபேர்பிரைஸ், கோல்ட் ஸ்டோரேஜ், ஜயண்ட், ஷெங்சியோங், பிரைம் ஆகிய பேரங்காடிகளைச் சேர்ந்த ஏறக்குறைய 400 கடைகள் பங்கெடுக்கின்றன.
இவை, சிங்கப்பூரில் செயல்படும் கடைகளில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு கடைகளுக்குச் சமம். ஆண்டுக்கு $100 மில்லியனுக்கும் அதிக விற்றுமுதலைக் கொண்டுள்ள பெரிய பேரங்காடிகள் இந்த ஏற்பாட்டில் சேர்கின்றன.
பிளாடஸ்டிக் பைக்கு விலை கொடுக்க வேண்டிய ஏற்பாடு பற்றி இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த ஏற்பாடு, பசுமை முயற்சிகளுக்கு முரணானதா என்று சிலர் ஐயம் எழுப்பினர்.
ஆனால் இதன் தொடர்பில் கருத்து தெரிவித்த ஃபேர்பிரைஸ் குழுமத்தின் பேச்சாளர், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளும் உணவுப் பொருளைப் பாதுகாப்பாக மூடுவதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளும் பல ஆண்டுகாலமாகவே விற்பனையில் இருந்து வருவதாகத் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதை ஃபேர்பிரைஸ் ஊக்குவிப்பதில்லை என்றும் அவர் கூறினார். ஃபேர்பிரைஸ் 2022ஆம் ஆண்டில் 57 மில்லியன் பிளாஸ்டிக் பைகளை மிச்சப்படுத்தியதாகவும் அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதனிடையே, திங்கள்கிழமை முதல் நடப்புக்கு வரும் கட்டண முறை பற்றி வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச் சொல்லி விளக்க ஊழியர்களுக்குத் தாங்கள் பயிற்சி அளித்து இருப்பதாக ஃபேர்பிரைஸ், கோல்ட் ஸ்டோரேஜ், ஷெங்சியோங், ஹோ மார்ட் ஆகிய பேரங்காடிகளுக்கான பேச்சாளர்கள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
பல கடைகளிலும் இதன் தொடர்பிலான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.