தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நோய் வராமல் முன்னதாகவே தடுக்கும் செயல்திட்டம்: ஜூலை 5 முதல் பதியலாம்

2 mins read
5a366bb9-78a2-447f-bb69-161bd021f3da
தகுதி பெறும் குடியிருப்பாளர்களுக்குச் சுகாதார அமைச்சு குறுஞ்செய்தி அனுப்பும். ஹெல்த்ஹப் செயலி மூலம் பதிந்துகொள்ள அது ஊக்கமூட்டும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

சிங்கப்பூரின் ‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ (ஹெல்தியர் எஸ்ஜி) என்ற வருமுன் நோய்த் தடுப்பு உத்தியில் ஜூலை 5 முதல் சிங்கப்பூர் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் தங்களைப் பதிந்துகொள்ள முடியும்.

முதலில் 60 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுள்ளோரும் அதில் பதிந்துகொள்ளலாம். 40 வயது முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் பின்னர் பதிந்துகொள்ள முடியும்.

சுகாதார அமைச்சு குறுஞ்செய்தி மூலம் பதிந்துகொள்ளும்படி மக்களை அழைக்கும். அவர்கள் ஹெல்த்ஹப் செயலி மூலம் தங்களைப் பதிந்துகொள்ளலாம்.

அப்படி பதிந்துகொண்ட பிறகு சிங்கப்பூர்வாசிகள், தங்களுக்கு வசதியான, விருப்பமான மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி மருந்தகத்தை அல்லது பலதுறை மருந்தகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

பிறகு அவர்கள் இலவசமாக மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைப் பெற தேதியை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நோய் வராமல் முன்னதாகவே தற்காத்துக் கொள்ளும் இந்தச் செயல்திட்டத்தில் ஜூலை 1ஆம் தேதி வாக்கில் 900க்கும் மேற்பட்ட தனியார் மருந்தகங்கள் சேர்ந்து இருக்கின்றன.

இந்தச் செயல்திட்டத்தின் காரணமாக 40 வயதுக்கும் மேற்பட்ட 2 மில்லியனுக்கும் அதிக சிங்கப்பூர்வாசிகள் அடுத்த ஆண்டு முடிவு வாக்கில் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டத்தில் சேர்ந்துகொண்ட பிறகு குடியிருப்பாளர்கள், சமூக பங்காளி அமைப்புகள் ஏற்பாட்டின்கீழ் கிடைக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் கலந்துகொள்ளலாம்.

ஒருங்கிணைந்த பராமரிப்பு முகவை, சுகாதார மேம்பாட்டுக் கழகம், மக்கள் கழகம், ஸ்போர்ட் சிங்கப்பூர் ஆகியவை அந்த அமைப்புகளில் உள்ளடங்கும்.

சிங்கப்பூரில் செயல்படும் தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம், தேசிய பல்கலைக்கழக சுகாதார நிறுவனம், சிங்ஹெல்த் ஆகிய மூன்று சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்களும் வட்டார சுகாதாரப் பராமரிப்பு நிர்வாகிகளை பணியில் அமர்த்தும்.

அவர்கள் தங்கள் வட்டாரங்களைச் சேர்ந்த மக்களை இந்தக் குழுமங்களை எட்ட உதவுவார்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்து இருக்கிறது.

சுகாதார மேம்பாட்டுக் கழகம் கட்டம் கட்டமாக தன்னுடைய உடற்பயிற்சி செயல்திட்டங்களை 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக்கும். அவற்றின் மூலம் ஒவ்வொரு வாரமும் ஏறக்குறைய 47,000 பேர் பலனடைவார்கள். இந்த எண்ணிக்கை இப்போது 31,000 ஆக இருக்கிறது.

இதனிடையே, மக்கள் கழகமும் குடியிருப்பாளர்களை எட்டி, அவர்களை உடற்பயிற்சிகளில் ஈடுபட வைப்பதற்கான தன்னுடைய முயற்சிகளை அதிகமாக்கும்.

அதேபோல, ஸ்போர்ட்எஸ்ஜி அமைப்பும் பொதுமக்களுக்கு ஊக்கமூட்டி அவர்களை விளையாட்டுகள், உடற்பயிற்சிகளில் கலந்துகொள்ளுமாறு செய்யும்.

சுகாதார அமைச்சு, தகுதி பெறும் குடியிருப்பாளர்களை எட்டும் நோக்கத்தில் ஜூலை முதல் வரும் நவம்பர் வரை 17 சாலைக் காட்சிகளை நடத்தும்.

அதோடு மட்டுமன்றி, சமூக நிலையங்களுக்கும் கூட்டு பரிசோதனை, தடுப்பூசி நிலையங்களுக்கும் ஏறக்குறைய 1,000 மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி தூதர்களை அமைச்சு அனுப்பி வைக்கும்.

கைப்பேசிகளைப் பயன்படுத்தாத அல்லது இந்தச் செயல்திட்டத்தில் பதிவதற்கு உதவி தேவைப்படக்கூடிய குடியிருப்பாளர்களை அணுகி அந்தத் தூதர்கள் உதவுவார்கள்.

குறிப்புச் சொற்கள்