மறுசீரமைப்புப் பணிகளால் வருந்தும் தேக்கா நிலையக் கடைக்காரர்கள்

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் இருக்கும் தேக்கா நிலையம் திங்கட்கிழமை ஜூலை மூன்றாம் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை மறுசீரமைப்புப் பணிகளுக்காக மூடப்படும். இதற்கு முன்னர் 2008ஆம் ஆண்டில் ஓராண்டு மறுசீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்த தேக்கா நிலையம் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் இம்முறை மூடப்படுகிறது.

தேக்கா நிலையத்தின் முதல் தளத்தில் சமைத்த உணவுகள் விற்கும் கடைகளும் ஈரச் சந்தைக் கடைகளும் செப்டம்பர் 30 வரை மூடப்படவுள்ளன. இரண்டாவது தளத்தில் இயங்கி வரும் ஆடைகள் விற்கும் கடைகள் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை மூடப்படவுள்ளன.

வட்டார மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் மறுசீரமைப்புப் பணி இடம்பெறும் என்று தஞ்சோங் பகார் நகர மன்றம் அறிவித்த நிலையில், கடைக்காரர்களும் ஊழியர்களும் இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளாகவுள்ளனர்.

தேக்கா நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும்பாலும் வாழ்வாதாரம் நாடி இந்தியா, மலேசியா போன்ற வெளிநாடுகளிலிருந்து வந்து இங்கு பிழைக்கின்றனர். தேக்கா நிலையம் மூடப்படுவதால் நிதி ரீதியாக இக்கட்டான சூழலுக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக தேக்கா நிலையம் இரண்டாவது தளத்தில் உள்ள பூஜா ஸ்டோர் கடையில் ஆடை விற்பனை செய்து வரும் 38 வயது ராதா ராஜு, “இந்த இரண்டு மாதங்களுக்கு வியாபாரம் பெரிதளவில் சரியும். நல்ல வேலை தீபாவளி நெருங்குவதற்கு முன்பே மறுசீரமைப்புப் பணிகள் முடிந்துவிடும். இரண்டு மாதங்களுக்கு நான் மலேசியாவுக்குச் சென்று எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவேன்,” என்று கூறினார் .

இரண்டாவது தளத்தில் வேறோர் இடத்தில் இருக்கும் அதே பூஜா ஸ்டோர் கடையில் எட்டு ஆண்டுகளாக ஆடை விற்று வரும் ஜெயா, இரண்டு மாத இடைவெளியில் வீட்டில் நன்கு ஓய்வெடுத்து தீபாவளி நெருங்குவதற்கு முன் மீண்டும் வியாபாரம் பழையது போல சூடு பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

தேக்கா நிலையத்தின் ஈரச் சந்தையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது எம்ஏ ஒஸ்மான் ஆட்டிறைச்சிக் கடை. இந்தியர்கள் மட்டுமின்றி பல்லின வாடிக்கையாளர்களையும் அதிகம் ஈர்க்கும் இக்கடை, மறுசீரமைப்புப் பணிகளால் பெரிதாகப் பாதிக்கப்பட போவதில்லை என நம்பிக்கை கொண்டுள்ளது.

கடை உரிமையாளரான அலி சப்ரி, 61, “கடை மூன்று மாதங்களுக்கு மூடப்பட்டாலும் எங்களுக்கு இணைய வியாபாரம் எப்போதும்போல நடைபெறும். மேலும் நாங்கள் தேசிய சுற்றுப்புற வாரியத்தை அணுகியதால் எங்கள் கடை தற்காலிகமாக ஷுன் ஃபூ (Shun Fu) ஈரச் சந்தையில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடையில் பணிபுரியும் நான்கு ஊழியர்களுக்கும் தினசரி ஊதியம் என்பதால் அவர்களுக்கும் இதனால் எவ்வித பாதிப்பும் கிடையாது. நாங்கள் மூன்று நாள்களுக்கு முன்பே ஆட்டிறைச்சி இருப்புகளைக் குறைத்துக்கொண்டதால் இறைச்சி விரயம் ஏற்பட வாய்ப்பு இல்லை,” என்று பகிர்ந்தார்.

தனது அக்காவின் கோழி இறைச்சி கடையில் வியாபாரத்துக்கு உதவி வரும் அபு பக்கர் ஜனத்து கனி, 44, “நாங்கள் மூன்று மாதங்களுக்கு எந்த திட்டமும் கொண்டிருக்கவில்லை. இப்போதைக்குக் கோழி இறைச்சி இருப்புகள் வீண் போகாமல் இருப்பதற்கு நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு மலிவான விலைக்கு விற்கிறோம். எங்களின் வழக்கமான வாடிக்கையாளர்கள் பெரிதும் கவலைப்படுவார்கள்,” என்று வருந்தினார்.

மலிவாக விற்கப்படும் பாரம்பரிய இந்திய உணவு வகைகளுக்கும், பிரபல இந்திய முஸ்லிம் உணவு வகைகளுக்கும் பெயர் போன முதல் தளத்தில், சாதாரண நாளில் கூட நாம் மக்கள் கூடுவதைக் காணலாம். ஆனால் இந்த மூன்று மாத இடைவெளியில் அவ்விடம் வெட்டவெளியாக இருக்கவுள்ளது.

1980களிலிருந்து ‘ஸ்கை லேப் குக்ட் ஃபுட்’ கடையை நடத்திவரும் உரிமையாளர் பொன்னம்மா ஷண்முகம், 73, காலை உணவு வகைகளிலிருந்து, தின்பண்டங்கள் வரை அனைத்தையுமே அதிகாலை நான்கு மணிக்கே தன் கடைக்கு வந்து சுயமாக சமைத்து விற்கிறார்.

ஊழியர்கள் யாரையும் பணியில் அமர்த்தாமல் தனது மகனும், பேத்தியின் ஆதரவிலும் கடை நடத்தி வரும் அவர், “மூன்று மாதங்களாக இருந்தாலும் என் கடை வியாபாரம் பெரிதளவில் சரியும். நான் எப்படி சமாளிக்க போகிறேன் என்று தெரியவில்லை,” என திண்டாடினார்.

‘பாரம்பரிய செட்டிநாடு உணவகம்’ எனும் கடையில் 10 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார்கள், சுவாமிநாதன் தம்பதியினர். தங்களின் நண்பரின் கடையில் பணிபுரிந்து வரும் இவர்கள், மூன்று மாத இடைவெளியில் இந்தியாவுக்குச் செல்லவோ அல்லது வேறு கடையில் தற்காலிகமாகப் பணிபுரிந்து வருமானம் ஈட்டவோ முடிவெடுத்துள்ளனர்.

குடும்பத் தொழிலாக கடந்த 11 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது ஹஜ்ஜா ஜெய்னப் எனும் இந்திய முஸ்லிம் உணவு வகைகள் விற்கப்படும் ஒரு கடை. அன்றாடம் கிட்டத்தட்ட 300 வாடிக்கையாளர்களைச் சந்திக்கும் இக்கடையின் உரிமையாளர் அபுசாலி, 59, “இந்த மூன்ற மாத இடைவெளியை ஒரு விடுமுறையாக எடுத்துக்கொண்டு நாங்கள் இந்தியா செல்லவுள்ளோம்,” என்றார்.

பிரபல இந்திய உணவான பிரியாணியைப் பொதுமக்கள் ‘யாகாதர் முஸ்லிம் ஃபுட்’ கடையில் எதிர்பார்க்கலாம். கடைக்கு முன் வாடிக்கையாளர்கள் கூட்டமாக வரிசையில் நின்று பிரியாணி வாங்குவதைக் கடை உரிமையாளர் சீனி இப்ராஹிம், 47, மூன்று மாதங்களுக்குப் பார்க்க இயலாது.

10 ஆண்டுகளாக கடையை நடத்தி வரும் அவர், “என் கடையில் மூன்று ஊழியர்கள்தான் பணிபுரிகிறார்கள். இந்த மூன்று மாதங்களில் அவர்கள் வேறு கடைக்குச் சென்று கூட வேலைப் பார்க்கலாம் அல்லது நிரந்தரமாக என் கடையை விட்டு வேறு இடத்தில் பணிபுரிய தொடங்கலாம். அது என் கையில் இல்லை,” என்று வருந்தினார்.

இஞ்சி தேநீருக்கும், இனிப்பு வகையான சென்டோலுக்கும் பிரபலமான முஜுபுர் ரஹ்மான் கஃபேடேரியா கடையில் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பணிபுரிகிறார் ஷேக் முகமது, 55.

மூன்று மாதங்களுக்குக் கடை மூடப்படுவதால் அவர்களின் வழக்கமான வாடிக்கையாளர்களில் 90 விழுக்காட்டினர் வருந்துவதாக கூறிய அவர், “இன்னும் ஒரு நாள் தான் உள்ளது. அதனால் நாங்கள் குளிர்பானங்களை வாடிக்கையாளர்களுக்கு மலிவான விலையில் $1 க்கு விற்கிறோம். மூன்று மாதங்களுக்கு இந்தியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் போகலாம் என்று திட்டமிட்டுள்ளேன்,” என்று பகிர்ந்தார்.

உணவு வகைகளைச் சுவைப்பதில் மட்டும் நிறுத்திவிடாமல் வாடிக்கையாளர்கள் பலருக்கு தேக்கா நிலையம் தங்களின் நண்பர்களைச் சந்திக்கும் தளமாகவும் திகழ்கிறது. அவ்வாறு, மூன்று மாதங்களுக்கு தேக்கா நிலையம் மூடப்படுவதை ஒட்டி வாடிக்கையாளர்களும் தங்கள் வருத்தத்தை தெரிவித்தனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக சிங்கப்பூரில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் 30 வயது ராஜகுரு விக்னேஷ், “சமீப காலமாகவே தேக்கா நிலையத்துக்கு வரும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இனி மூன்று மாதங்களுக்குப் பின் எப்படி இருக்கபோகிறது என்று தெரியவில்லை. நான் வாரத்திற்கு மூன்று நாள்கள் இங்குதான் என் நண்பர்களோடு இருப்பேன். இனி வேறு இடத்தைத் தேட வேண்டும்.” என்று தெரிவித்தார்.

செயல்முறை ஊழியர் ராம பாஸ்கரன், 41, சிங்கப்பூரில் 15 ஆண்டுகளாக இருக்கிறார். “மலிவான உணவு வகைகள் கிடைக்கும் இடமாகவும், என் நண்பர்களை ஒரே நேரத்தில் சந்திக்கும் தளமாகவும் இவ்வளவு காலம் இருந்து வந்த தேக்கா நிலையத்தைப் போல வேறு எந்த இடமும் இல்லை,” என்று ஏக்கத்தோடு கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!