அதிபர் சவால் நிதிக்கு ஆதரவாக மக்கள் கழகம் $250,000 நன்கொடை வழங்க உறுதி கூறி இருக்கிறது. பராமரிப்புச் சேவை வழங்குவோருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று இந்த ஆண்டில் அதிபர் சவால் நிதி இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.
அதிபர் ஹலிமா யாக்கோப் ஞாயிற்றுக்கிழமை ஹோங் கா வடக்கு சமூக நிலையத்தில் மக்கள் கழகத்திடம் இருந்து ஒரு காசோலையைப் பெற்றுக்கொண்டார்.
அந்தச் சமூக நிலையத்தில் பராமரிப்பாளர்கள் 50 பேருக்காக ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் அதிபர் கலந்துகொண்டார்.
மனநலப் பிரச்சினையை எதிர்நோக்குவோருக்குப் பராமரிப்புச் சேவையை வழங்கும் சேவையாளர்களுக்கு இன்னும் சிறந்த முறையில் ஆதரவு அளிக்கும் நோக்கத்தில் தான் சமூகப் பங்காளி அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட்டு இருப்பதாக மக்கள் கழகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
உள்ளூர் சமூகங்களில் பராமரிப்பாளர்கள் வழங்கும் ஆதரவை வலுப்படுத்துவதும் தனது நோக்கம் என்றும் அது குறிப்பிட்டது.
‘கேர்கிவ்வர்ஸ் அலையன்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனம் ஏற்பாடு செய்த பயிற்சி செயல்திட்டங்களில் 2022 முதல் 150க்கும் மேற்பட்ட பராமரிப்புச் சேவை வழங்குவோர் கலந்துகொண்டு இருக்கிறார்கள்.
பராமரிப்புச் சேவை வழங்கும் 80 பேர் ஆதரவுக் குழுக்களில் சேர்ந்து இருக்கிறார்கள் என்று மக்கள் கழகம் தெரிவித்துள்ளது.
அதிபரும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோரும் நேற்றைய நிகழ்ச்சியில் பராமரிப்பாளர்களுடன் கலந்துரையாடினர்.
தொடர்புடைய செய்திகள்
அந்தப் பராமரிப்பாளர்கள் மக்கள் கழகம் ஏற்பாடு செய்த செயல்திட்டங்களில் கலந்துகொண்டவர்கள்.
அதிபர் சவால் நிதிக்கு 2022ல் சாதனை அளவாக $16.9 மில்லியன் திரண்டது. அந்த நிதி 82 சமூகச் சேவை அமைப்புகளுக்கு ஆதரவு அளித்துள்ளது.