தோ பாயோ லோரோங் 2ஐ விட்டு வெளியேறும் வழிக்கு அருகே, சாங்கி நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் ஒரு பெரிய மரம் ஒரு கார் மீது விழுந்துவிட்டது.
அந்தக் காரில் இருந்த பயணி சிக்கிக்கொண்டார். இரண்டு பேர் அவரை மீட்டார்கள் என்று ஷின் மின் நாளிதழ் தெரிவித்தது.
யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
விரைவுச்சாலையில் காலை 6 மணியளவில் அந்த மரம் விழுந்ததால் சாங்கி நோக்கிச் செல்லும் அந்த விரைவுச்சாலையின் நான்கு தடங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எண் 5, 151, 154 ஆகிய பேருந்துச் சேவைகளை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வேறு வழித்தடங்களில் திருப்பிவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் கூறியது.
விரைவுச்சாலையில் விழுந்த மரம் காலை 8.10 மணியளவில் அகற்றப்பட்டுவிட்டது.
கடந்த மூன்று நாள்களில் இதையும் சேர்த்து இரண்டு பெரிய மரங்கள் விழுந்து இருக்கின்றன.
தியோங் பாருவில் எண் 82, தியோங் போ ரோடு முகவரியில் செயல்படும் ஒரு காப்பிக்கடையின் கூரையில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பெரிய மரம் விழுந்துவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதனால் அந்தக் காப்பிக்கடையின் முதல் மாடியில் உள்ள டிரிப்ஸ் பேக்கரி கஃபே என்ற கடையின் குளிரூட்டிச் சாதனம் பாதிக்கப்பட்டது.


