வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீட்டு விலை இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் 1.4 விழுக்காடு கூடியதை வீவக திங்கள்கிழமை வெளியிட்ட முன்னோட்ட மதிப்பீடுகள் காட்டின. ஒப்புநோக்க, இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் வீட்டு விலை 1 விழுக்காடு கூடியிருந்தது.
2020 இரண்டாம் காலாண்டிற்குப் பிறகு தொடர்ந்து 13வது காலாண்டாக மறுவிற்பனை வீட்டு விலை கூடியது.
எனினும், 2021 டிசம்பரில் சொத்துச் சந்தைத் தணிப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மறுவிற்பனை வீட்டு விலை மட்டுப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
2022ல் காலாண்டு அடிப்படையில் வீட்டு விலை சராசரியாக 2.5 விழுக்காடு கூடியிருந்தது. அதோடு ஒப்பிடுகையில், கடந்த காலாண்டில் 1.4 விழுக்காடு விலை உயர்வு குறைவே.
கடந்த காலாண்டில் குறைவான வீடுகள் கைமாறின. ஏறக்குறைய 6,409 வீடுகள் கைமாறியதாக மதிப்பிடப்படுகிறது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் மறுவிற்பனையான 6,720 வீடுகளைவிட இந்த எண்ணிக்கை 4.6 விழுக்காடு குறைவு.
தனியார், வீவக மறுவிற்பனைச் சந்தையில் வீட்டு விலைகள் தொடர்ந்து மட்டுப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதை முன்னோட்ட மதிப்பீடுகள் காட்டுவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ திங்கள்கிழமை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
சொத்துச் சந்தையைத் தணித்து வீட்டுத் தேவையை மட்டுப்படுத்த, 2021 டிசம்பரிலிருந்து அதிகாரிகள் மூன்று முறை நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
“இந்த நடவடிக்கைகள் மூலம் மறுவிற்பனை வீட்டு விலைகள் உயரும் விகிதம் மட்டுப்படுவதை நாங்கள் காண்கிறோம்,” என்று வீவக கூறியது.
இந்நிலையில், இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் வீட்டு விலையேற்றத்துக்கு ஐந்தறை வீடுகளே காரணம் என்று ஆரஞ்சுடீ & டை நிறுவனத்தின் ஆய்வு, பகுப்பாய்வுப் பிரிவு மூத்த உதவித் தலைவர் கிறிஸ்டின் சன் கூறினார்.
ஐந்தறை வீட்டு இடைநிலை விலை இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் 1.9 விழுக்காடு உயர்ந்து $650,000 ஆனதாக அவர் சொன்னார்.
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்தம் 103 வீவக மறுவிற்பனை வீடுகள் குறைந்தது $1 மில்லியனுக்கு விற்பனையாகின. இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களிலும் 103 வீடுகள் குறைந்தது $1 மில்லியனுக்கு விற்பனையானதாக திருவாட்டி சன் குறிப்பிட்டார்.


